வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: சாமானிய மக்களுடனான காங்கிரசின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை நாம் ஒப்பு கொள்ள வேண்டும் என அக்கட்சி எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடக்கும் சிந்தனையாளர் மாநாட்டில், அக்கட்சி எம்.பி., ராகுல் பேசியதாவது: இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியாவது இது போன்ற விவாதத்தை அனுமதிக்குமா? நிச்சயம் பா.ஜ.,வும் ஆர்எஸ்எஸ்., அமைப்பும் அனுமதிக்காது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். இந்திய மக்கள் ஒன்று சேர்ந்து ஒன்றியத்தை அமைத்துள்ளனர். சாமானிய மக்களுடனான நமது இணைப்பை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். அது முறிந்து விட்டது என்பதை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அதனை நாம் பலப்படுத்த வேண்டும். இது குறுகிய காலத்தில் நடந்து விடாது. இதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.
காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் பயப்பட தேவையில்லை. நமது நாடு உண்மையில் நம்பிக்கை கொண்டுள்ளது. எனது எஞ்சிய வாழ்க்கையில் உங்களுடன் தான் இருப்பேன். இந்த போராட்டத்தில், உங்களுடன் இணைந்து போரிடுவேன். எனக்கு எந்த பயமும் இல்லை. கடைசி வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். மூத்த தலைவர்கள் நமக்கு பாதையை காட்டியுள்ளனர். கொள்கை ரீதியில், அரசியல் நிலைப்பாட்டில் காங்கிரஸ் செல்ல வேண்டிய பாதை தெளிவாக உள்ளது. எதிர்காலத்தில் பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அரசியல்சாசன அமைப்புகள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாட்டை எரிய விடாமல் பார்த்து கொள்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிட ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
சில நேரங்களில் நமது தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இது கடினமான போராட்டம் என்பதால், அது ஏற்படுவது வழக்கமானது தான். இந்த போராட்டத்தை மாநில கட்சியால் செய்ய முடியாது. இந்த போராட்டமானது கொள்கை அடிப்படையில் அமைந்தது. இந்தியா எந்த தனி நபருக்கும், கட்சிக்கும் சொந்தமானது இல்லை. அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்கும் கட்சி காங்கிரஸ். அது தான் காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ.,.

மக்கள் பிரிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர வைக்க வேண்டியது நமது பொறுப்பு. காங்கிரசால் மட்டுமே இதனை செய்ய முடியும். காங்கிரசால் மட்டுமே நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும் என்பது எனக்கு தெரியும். நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் அமைதியின்மை நிலவி வருகிறது. பெகாசஸ் போன்றவற்றை பயன்படுத்தி, இந்தியாவில் அரசியல் ரீதியிலான கருத்து பகிர்வுகள் நசுக்கப்படுகிறது. மூத்த தலைவரோ, கட்சியின் அடிமட்ட தொண்டரோ யாராக இருந்தாலும் மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டும்.நமது எதிரிகள் நம்மை மடக்கிய இடம் தகவல் தொடர்பு. அதில் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்ய வேண்டும். இதனை இளைஞர்கள் கையில் எடுத்து கொள்ள வேண்டும். நாடு முழுவதும் மக்களை நேரடியாக சந்திப்பதற்காக யாத்திரை நடத்தப்படும். அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் என் குடும்பம். நாம் அனைவரும் ஒரே குடும்பம். ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற விஷயத்தை கொண்டு வர வேண்டும் என விரும்புகின்றேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

பின்னர் சோனியா பேசுகையில், இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சோனியா பேசியதாவது: வரும் அக்.,2 காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை நடக்கும். இந்த பாத யாத்திரையில் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும். சமூக நல்லிணக்கத்திற்கான பிணைப்பை பலப்படுத்தவும், சமீப நாட்களாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள அரசியல் சாசனங்கள் அடிப்படை மாண்பை பாதுகாக்கவும், மக்களின் அன்றாட பிரச்னைகளை எடுத்து கூறவும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. அனைத்திலும் இருந்து நாம் மீண்டு வருவோம். இதுதான் நமது தீர்மானம். நமது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE