சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அடுத்தும் பொய் சொல்ல தயாராகிட்டாங்க!

Added : மே 15, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அடுத்தும் பொய் சொல்ல தயாராகிட்டாங்க! என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சொத்து வரியை இனிமேல், ௧௦ ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, ௨௦ ஆண்டுகளுக்கு ஒரு முறையோ உயர்த்தி, மக்களின் பிராணனை வாங்காமல், ஆண்டுக்கு ஒரு முறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், தங்களின் மனம் போல உயர்த்திக் கொள்ளலாம் என, திராவிட மாடல் அரசு, சட்டசபையில் மசோதாவை


அடுத்தும் பொய் சொல்ல தயாராகிட்டாங்க!என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சொத்து வரியை இனிமேல், ௧௦ ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, ௨௦ ஆண்டுகளுக்கு ஒரு முறையோ உயர்த்தி, மக்களின் பிராணனை வாங்காமல், ஆண்டுக்கு ஒரு முறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், தங்களின் மனம் போல உயர்த்திக் கொள்ளலாம் என, திராவிட மாடல் அரசு, சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. ஆண்டுதோறும் சொத்து வரியை, உள்ளாட்சி அமைப்புகள் உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனரே தவிர, அதிகபட்சமாக எவ்வளவு சதவீதம் உயர்த்தலாம் என்ற நிபந்தனை எதுவும் இல்லை. இந்த விஷயத்தில், நாம் கோடு போட்டுக் கொடுத்தால், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ரோடு போட்டு விடுவர் என, ஆட்சியாளர்கள் நம்புகின்றனர் போலும்.
காங்கிரஸ் ஆட்சியில் வரி விதித்த போது, ஜனவரி, பிப்ரவரி என பல வரிகளை விதித்து, மக்களை கசக்கி பிழிகின்றனர்; இது என்ன கொடுமை என்று நக்கல், நையாண்டி, எகத்தாளம் பேசிய திராவிட செம்மல்கள், இப்போது வரி விதிக்காமல், மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது என, நொண்டி சமாதானம் சொல்கின்றனர். 'எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்; அது தான் நாங்கள் போற்றும் உண்மையான சமூக நீதி' என்று சொல்லும் தமிழக ஆட்சியாளர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் முற்பட்ட வகுப்பினருக்கு, மத்திய அரசு அறிவித்த, 10 சதவீத இடஒதுக்கீட்டை மட்டும் அமல் செய்ய மறுக்கின்றனர்.
'சொல்வதையே செய்வோம்; செய்வதையே சொல்வோம்' என்று வியாக்கியானம் பேசுபவர்கள், தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்வது சாத்தியம் இல்லை என்று கைவிரித்து விட்டனர். இதனால், ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டியது போல, தி.மு.க.,வுக்கும் வரும் தேர்தலில், நாங்கள் பாடம் கற்பிப்போம் என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அவரது கட்சியினரும், சட்டசபை தேர்தல் நேரத்தில், வாயால் சுட்ட, 'வடை' எல்லாம், பொய் வாக்குறுதிகள் என ஒவ்வொன்றாக நிரூபணமாகி வருகின்றன. ஐந்தாண்டு ஆட்சி முடியும் சமயத்தில், மக்களை மீண்டும் ஏமாற்ற, வேறு என்னென்ன பொய் சொல்லலாம் என்று, இப்போதே யோசிக்கத் துவங்கி விட்டனர். மறுபடியும் இவர்களிடம் ஏமாறாமல் இருக்க, மக்களே உஷாராகுங்க!


பொருளாலே வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி!முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையில் தொழிலதிபர் ஸ்ரீகாந்தும், அவரின் மனைவி அனுராதாவும், ௪௦ கோடி ரூபாய்க்காக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.இந்த கொலையை யாரோ மூன்றாவது மனிதன் செய்யவில்லை. வீட்டுக் காவலாளியின் மகனே செய்துள்ளான். இந்தக் கொலை சொல்லித் தரும் பாடம் என்ன? ஏழ்மையில் உள்ள வீட்டு வேலையாட்கள் முன்னிலையில், கோடிகளைப் பற்றி பேசாதீர்கள் என்பதே. தன் மகனை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என கனவு கண்ட கொலைகாரன் கிருஷ்ணா, தனக்கு எந்த உதவியும் செய்யாத முதலாளியை கொல்ல திட்டமிட்டது வறுமையின் கொடுமையால்... ஆம், இளமையில் வறுமை கொடியது தான்.முன்பெல்லாம் பெற்ற பிள்ளைகள், காசு பணம் சம்பாதிக்க, தேசம் விட்டு தேசம் போகவில்லை. போதுமென்ற பொன் மனதோடு திருப்தியாய் சந்தோஷமாக உள்ளூரிலேயே, உள்நாட்டிலேயே வாழ்ந்தனர்.
முதியோர் இல்லங்களும் அப்போது இல்லை. என்றைக்கு டாலருக்கு மனிதன் அடிமையானானோ, அன்றே இடர்களும் ஆரம்பமாகி விட்டன. பிள்ளைகள் எல்லாம் சம்பாதிக்க வெளிநாடு செல்ல, முதிய தாய், தந்தையர் தனிக்குடித்தனம் நடத்துகின்றனர். ஓரிரு ஆண்டுகளுக்கு பின், பிள்ளைகள் வருகை... வீடே கோலாகலம்... கொண்டாட்டம். மீண்டும் அவர்கள் வெளிநாடு சென்ற பின், விருந்தாளி வந்து போன வீடாய் வெறிச்சோடுகிறது வெறுமை. இதன் பின்னணி பணம் அன்றி, வேறு என்ன? நல்லது, கெட்டதுக்கு கூட வர முடியாத சூழலில், வெளிநாடுகளில் பலர் பணியாற்றுகின்றனர். வயதான பெற்றோரை, பக்கத்தில் இருந்து பக்குவமாய், அவர்களது இறுதிக் காலத்தில் பார்த்துக் கொண்ட அன்றைய பண்பாடு எல்லாம் காற்றோடு போயாச்சு. இன்று பல வீடுகளில், முதியோர் தனிக் குடித்தனம் என்பது
தான் உண்மை. கொலையாளிக்கும், கொள்ளைக்காரர்களுக்கும், இது போன்றவர்களின் தனிக்குடித்தனம், அவர்களின் கொடூர செயலை அரங்கேற்ற சாதகமாக உள்ளது. இல்லாதவனுக்கு இல்லை என்பது தொல்லை; இருப்பவனுக்கு இருப்பது எல்லாம் தொல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை என்கிறது வள்ளுவம். அந்தப் பொருளே, உலக வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைப்பது, அதை விட கொடூரம்.


தெய்வம் நின்று கொன்றது!அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழர்கள், தங்களின் உரிமைக்காக போராடிய நேரத்தில், அவர்களுக்கு எண்ணற்ற கொடுமைகள் இழைத்ததுடன், அப்பாவிகள் பலரை கொன்றும் குவித்தார், மகிந்த ராஜபக்சே. அப்போது, அராஜகத்தில் ஆனந்தக் கூத்தாடிய அவர், இன்று தங்களின் சிங்கள இனத்தவர்களாலே விரட்டி அடிக்கப்படுகிறார். பொதுமக்களின் போராட்டம் மற்றும் எதிர்ப்பு காரணமாக, பிரதமர் பதவியை இப்போது ராஜினாமா செய்துள்ளார். 'கெடுவான் கேடு நினைப்பான்' என்பதை போல, தன்னை வாழ வைத்த மக்களின் மீது, தன் ஆதரவாளர்கள்
வாயிலாக தாக்குதல் நடத்தியதால், அதுவே பெரும் கலவரத்திற்கு காரணமாகி விட்டது. பொருளாதார நெருக்கடிக்கு எதிராக, மக்கள் அமைதி வழியில் துவங்கிய போராட்டம், இன்று புரட்சியாக வெடித்துள்ளது. அமைச்சர், மேயர் வீடு உட்பட, பல இடங்களில் தீவைப்பு, துப்பாக்கிச் சூடு, ஆளும் கட்சி எம்.பி., பலி என, சில மணி நேரங்களில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறி விட்டன. இவை அனைத்தும் திட்டமிடப்படாமல் சுயம்பாக, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதைப் போல நடந்தேறி விட்டன. இலங்கையில், தற்போது நடந்த சம்பவம், அந்நாட்டிற்கு மட்டுமல்ல, அத்தனை நாட்டு அதிபர்களுக்கும், கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்குமான எச்சரிக்கையாகும். ஆட்சியில் இருக்கிற போது, அடாவடியை குறைத்து, எளிய முறையில் மக்களை அணுகி, அவர்களின் குறைகளை நிறைகளாக மாற்றினால், இதுபோன்று மக்கள் கோபத்திற்கு ஆளாகாமல் அனைவரும் தப்பிக்கலாம். இல்லையேல், இலங்கையின் கதி அனைவருக்கும் உறுதி. 'அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பது பழமொழி. இலங்கையில் தற்போது நடைபெறும் சம்பவங்கள்,
அந்த பழமொழியை மெய்ப்பிப்பதாக உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
16-மே-202216:32:58 IST Report Abuse
sethusubramaniam இன்னும் நாலு வருஷம் இருக்கே. அதுக்குள்ள அரசு ஊழியர்களை எப்படி சரிக்கட்டணுமுன்னு உங்களுக்குத் தெரியும். எல்லாம் எங்கப்பா சொல்லிகுடுத்துட்டு போயிருக்காரு ' ன்னு ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ் கேக்குது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X