சென்னை : நீர் நிலையாக உள்ள கூவம் நதி மற்றும் சில ஏரிகளை திறந்தவெளி பொழுதுபோக்கு பகுதி என, சி.எம்.டி.ஏ., முழுமை திட்ட வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமை திட்டத்தை, பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., 2008ல் அறிவித்தது. இதற்கான தயாரிப்பு நிலையில், பல்வேறு கட்டங்களாக பொது மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.
வல்லுனர்கள் ஆய்வு
பொதுமக்கள் கருத்து, வல்லுனர்கள் ஆய்வு, பல்வேறு துறைகள் வாரியாக அதிகாரிகள் ஆய்வு என, பல்வேறு கட்டங்களை கடந்து, நில வகைப்பாடு வரைபடங்கள் இறுதி செய்யப்பட்டன.
இவ்வளவு நடவடிக்கை எடுத்தும், பல்வேறு பகுதிகளுக்கான நில வகைப்பாடு வரைபடங்களில் பிழைகள் இருப்பதாக புகார்கள் வருகின்றன.சில தனியார் நிலங்கள் தொடர்பான புகார் களுக்கு, நில வகைப்பாடு மாற்றத்திற்கு விண்ணப்பிக்க அதிகாரிகள் பரிந்துரைத்து வருகின்றனர். இந்நிலையில், அரசு நிலங்களின் வகைப்பாடுகள் பல இடங்களில் தவறாக இருப்பது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
திருவேற்காடு நகராட்சிக்கான முழுமை திட்ட வரைபடத்தில், கூவம் நதி, அயனம்பாக்கம் ஏரி உள்ளிட்டவை 'நீர் நிலை' என்று இருக்க வேண்டும். ஆனால், சி.எம்.டி.ஏ., இரண்டாவது முழுமை திட்ட வரைபடத்தில் இங்கு நீர் நிலை பகுதிகளை 'திறந்தவெளி, பொழுதுபோக்கு பகுதி' என குறிப்பிடப்பட்டுள்ளது.ஒரு சர்வே எண்ணில் இப்படி என்றால், அதை எழுத்து பிழை அல்லது தவறுதலாக குறிப்பிடப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், செயற்கைக்கோள் வரைபடத்திலும் நீர் நிலை என தெளிவாக தெரியும் இடங்களை, திறந்தவெளி பொழுதுபோக்கு பகுதி என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் குறிப்பிட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துஉள்ளது.
கடுமையான நடவடிக்கை
இதுபோன்ற தவறுகள், நீர் நிலை அபகரிப்பாளர்களுக்கு பேருதவியாக அமைந்துவிடும் என்பதை புரிந்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் செயல்பட வேண்டும். முழுமை திட்ட தயாரிப்பில் நடந்த தவறாக இருந்தாலும், தற்போது வரை இந்த வரைபடத்தை பயன்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரிகளை என்ன செய்வது? கடந்த 2008 முதல் தற்போது வரை முழுமை திட்ட பிரிவில் பணி புரிந்த அனைத்து அதிகாரிகள் மீதும், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை பெருநகரில், நில உரிமையாளர்கள் கோரிக்கை அடிப்படையில், 26 இடங்களில் நில வகைப்பாடு மாற்றத்துக்கான கருத்து கேட்பு பணிகளை சி.எம்.டி.ஏ., துவக்கி
உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே, உடையால் கோவில் கிராமம்; காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் தாலுகா கொளப்பாக்கம் ஆகிய இடங்களில், பகுதி நீர் நிலை என உள்ள இடங்களை ஆதார குடியிருப்பாக மாற்ற, தனி நபர்களின் விண்ணப்பம் வந்துள்ளது.
இது தவிர, 12 இடங்களில் விவசாய பயன்பாட்டு நிலங்களை, வேறு வகைப்பாட்டுக்கு மாற்றக் கோரியும் விண்ணப்பம் வந்துள்ளது. இதுகுறித்து, 21 நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE