சென்னை :முதல்வர் ஸ்டாலினுக்கும், அவரது அண்ணன் அழகிரிக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாத நிலையில், திருமண விழாவில், 'என் அண்ணன் அழகிரி' என பாசத்துடன் குறிப்பிட்டு பேசியது, தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்தபோது, அவரது இறுதி சடங்கில் முதல்வர் ஸ்டாலின், அவரது அண்ணன் அழகிரி ஒன்றாக இருந்தனர். அதன்பின் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.
கடந்த 2014ல் தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, தி.மு.க.,வில் இணைய முயன்றார். இதை முதல்வர் ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. ஸ்டாலின் முதல்வரான பின் அழகிரி அமைதியாகிவிட்டார்.
இந்நிலையில், கருணாநிதியின் உதவியாளராக இருந்த சண்முகநாதனின் பேரன் டாக்டர் அரவிந்த் ராஜ்யா - பிரியதர்ஷினி திருமணம், நேற்று சென்னையில் நடந்தது.
இதில் மணமக்களை வாழ்த்தி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
![]()
|
சண்முகநாதனுக்கு, 1971ம் ஆண்டு மணவிழா நிகழ்ச்சி, கருணாநிதி தலைமையில் நடந்தது. அப்போது, அவருக்கு நானும்... நான் மட்டுமல்ல, என் அண்ணன் அழகிரியும், என் குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அனைவரும், மாப்பிள்ளைத் தோழர்களாக இருந்து, அந்தத் திருமண விழாவை நடத்தி வைக்கக் கூடிய ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.
கருணாநிதிக்கு நான் எப்படி ஒரு மகனாக இருக்கிறேனோ, அதுபோல சண்முகநாதனும் ஒரு மகனாகத்தான் கடைசி வரையில் இருந்து வந்திருக்கிறார்.இவ்வாறு, முதல்வர் ஸ்டாலின் பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது, 'என் அணணன் அழகிரி' என, பாசத்துடன் குறிப்பிட்டது, அவருக்கு அண்ணன் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.