வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சொத்து வரியை இனிமேல், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ உயர்த்தி, மக்களின் பிராணனை வாங்காமல், ஆண்டுக்கு ஒரு முறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், தங்களின் மனம் போல உயர்த்திக் கொள்ளலாம் என, திராவிட மாடல் அரசு, சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
ஆண்டுதோறும் சொத்து வரியை, உள்ளாட்சி அமைப்புகள் உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனரே தவிர, அதிகபட்சமாக எவ்வளவு சதவீதம் உயர்த்தலாம் என்ற நிபந்தனை எதுவும் இல்லை. இந்த விஷயத்தில், நாம் கோடு போட்டுக் கொடுத்தால், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ரோடு போட்டு விடுவர் என, ஆட்சியாளர்கள் நம்புகின்றனர் போலும்.
காங்கிரஸ் ஆட்சியில் வரி விதித்த போது, ஜனவரி, பிப்ரவரி என பல வரிகளை விதித்து, மக்களை கசக்கி பிழிகின்றனர்; இது என்ன கொடுமை என்று நக்கல், நையாண்டி, எகத்தாளம் பேசிய திராவிட செம்மல்கள், இப்போது வரி விதிக்காமல், மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாது என, நொண்டி சமாதானம் சொல்கின்றனர். 'எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்; அது தான் நாங்கள் போற்றும் உண்மையான சமூக நீதி' என்று சொல்லும் தமிழக ஆட்சியாளர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் முற்பட்ட வகுப்பினருக்கு, மத்திய அரசு அறிவித்த, 10 சதவீத இடஒதுக்கீட்டை மட்டும் அமல் செய்ய மறுக்கின்றனர்.

'சொல்வதையே செய்வோம்; செய்வதையே சொல்வோம்' என்று வியாக்கியானம் பேசுபவர்கள், தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்வது சாத்தியம் இல்லை என்று கைவிரித்து விட்டனர். இதனால், ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டியது போல, தி.மு.க.,வுக்கும் வரும் தேர்தலில், நாங்கள் பாடம் கற்பிப்போம் என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அவரது கட்சியினரும், சட்டசபை தேர்தல் நேரத்தில், வாயால் சுட்ட, 'வடை' எல்லாம், பொய் வாக்குறுதிகள் என ஒவ்வொன்றாக நிரூபணமாகி வருகின்றன. ஐந்தாண்டு ஆட்சி முடியும் சமயத்தில், மக்களை மீண்டும் ஏமாற்ற, வேறு என்னென்ன பொய் சொல்லலாம் என்று, இப்போதே யோசிக்கத் துவங்கி விட்டனர். மறுபடியும் இவர்களிடம் ஏமாறாமல் இருக்க, மக்களே உஷாராகுங்க!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE