வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா சொன்ன குரங்கு கதை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த தன் ஆதரவாளர் வீட்டு திருமண விழாவில் சசிகலா பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க. உண்மையான தொண்டர்களின் தியாகத்தால் உருவானது. எதிர்கட்சியினர் எத்தனை கணக்குகள் போட்டாலும் நான் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. கட்சியை காப்பாற்றி மீண்டும் வலிமை கொண்ட இயக்கமாக உருவாக்க தகுந்த நேரம் வந்து விட்டது.
மாங்கொட்டையை ஊன்றி மரமாக வளர செய்தால் இஷ்டத்திற்கு மாம்பழங்களை பறித்துச் சாப்பிடலாம் என ஒரு குரங்கு மாங்கொட்டையை மண்ணுக்குள் புதைத்து நீரூற்றியது.சிறிது காலமாகியும் செடி வளரவில்லை. குரங்கிற்கோ அவசரம். அந்த அவசர புத்தி குரங்கு மண்ணில் புதைத்து வைத்திருந்த மாங்கொட்டையை எடுத்து பார்ப்பதும் மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக இருந்தது. இதனால் செடி முளைக்கவில்லை.
ஆத்திரமடைந்த குரங்கு மாங்கொட்டையை துார எறிந்து விட்டு வருத்தப்பட்டது. குரங்கின் அவசர புத்திதான் அதற்கு காரணம்.விளைச்சல் கிடைக்க வேண்டும் என்றால் சில காலம் பொறுமை காக்க வேண்டும்.அதுபோல நம் செயல்கள் இருக்க வேண்டும். அப்படி செயல்பட்டால் தான் நம் இயக்கம் வலிமை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த குரங்கு கதையை தினகரனுக்காக தான் கூறினார் என ஒரு தரப்பினரும் பழனிசாமிக்காக கூறினார் என மற்றொரு தரப்பினரும் பெரும் விவாதமே நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE