சைதாப்பேட்டை : சைதாப்பேட்டையை சேர்ந்த போலீஸ்காரர் ஜான் லுாயிஸ், 28. இவர், நேற்று பணி முடித்து, இருசக்கர வாகனத்தில் பரங்கிமலை நோக்கி சென்றார்.
சைதாப்பேட்டை சுரங்கப்பாதை அருகே செல்லும்போது, சாலையோர கடையில் டீ குடித்து கொண்டிருந்த பாலசந்திரன், 45, என்பவர் இருமல் வந்து எச்சில் துப்பி உள்ளார். எச்சில், எதிர்பாராத விதமாக ஜான் லுாயிஸ் சீருடையில் தெறித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜான் லுாயிஸ் 'போலீஸ் சீருடையில் ஏன் எச்சில் துப்பினாய்...' எனகேட்டுள்ளார்.
இதற்கு, 'நான் இருமல் வந்து, சாலையில் எச்சில் தான் துப்பினேன். உங்கள் மீது துப்பவில்லை' எனக் கூறினார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு, கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த போலீஸ் ஜான் லுாயிஸ், பாலசந்திரன் முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில், பாலசந்திரன் முகம், தாடை, நெற்றி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை, வாகன ஓட்டிகள் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்தனர்.
மாநகர பஸ் நடத்துனரான பாலசந்திரன், சைதாப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக, சைதாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், போலீஸ்காரர் ஜான் லுாயிஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE