வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : சென்னை பல்கலையின், 164வது பட்டமளிப்பு விழா இன்று(மே 16) நடக்கிறது. இதில், முதல்வரும், கவர்னரும் ஒரே மேடையில் பங்கேற்பதால், அரசியல் ரீதியாக பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சுற்றிஉள்ள கலை, அறிவியல் கல்லுாரிகள், சென்னை பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற்று செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, சென்னை பல்கலையின் தேர்வு துறை வழியே தேர்வு நடத்தப்பட்டு, பட்டம் வழங்கப்படும்.
கடந்த கல்வி ஆண்டில் பட்டம் முடித்தவர்களுக்கான, 164வது பட்டமளிப்பு விழா, இன்று காலை 10:00 மணிக்கு சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடக்கிறது. பல்கலை வேந்தரும், கவர்னருமான ரவி விழாவுக்கு தலைமை ஏற்கிறார். முக்கிய விருந்தினராக, தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த விழாவில், சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல்லுாரிகளில் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் உட்பட, 712 பேர் பட்டம் பெற உள்ளனர். பல்கலையின் ஆண்டறிக்கையை, துணைவேந்தர் கவுரி வாசிக்கிறார். பல்கலையின் இணைவேந்தரும், உயர்கல்வி அமைச்சருமான பொன்முடியும் பங்கேற்று பேச உள்ளார்.

இந்த விழாவில், முதல்வரும், கவர்னரும் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் முரண்பட்ட கருத்துக்களை எடுத்துரைப்பரா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் பாரதியார் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் பொன்முடி பங்கேற்று பேசியபோது, 'ஹிந்தி மொழியை திணிக்க வேண்டாம்' என்றார்.
அதற்கு, 'ஹிந்தியை திணிக்கவில்லை; மாறாக அதை படிக்க விரும்புவோர் உற்சாகப்படுத்தப்படுவர்' என, கவர்னர் பதில் அளித்தார். இதுபோன்று, சென்னை பல்கலையில் அரசியல் ரீதியான கருத்துக்கள் வெளியாகுமா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE