வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : அபிஷ்ட வரதராஜ சுவாமி கோவில் தேர் திருவிழா இன்று நடைபெறுவதை உறுதி செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அபிஷ்ட வரதராஜ சுவாமி கோவில் தேர் திருவிழாவை நிறுத்தும்படி இம்மாதம், 13ம் தேதி ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் உத்தரவிட்டார். அதில், தேர் செல்லும் பாதை இரு இடங்களில் குறுகலாக இருப்பதாகவும், மின் கம்பங்கள் சாலையின் உள்பக்கம் அமைந்துள்ளதாகவும், தேர் உயரத்தை விட மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதாகவும் கூறியிருந்தார்.
ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளரின் உத்தரவை ரத்து செய்ய கோரி, கோவிலின் பரம்பரை அறங்காவலர் சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை அவசர வழக்காக, நாகர்கோவிலில் இருந்து நீதிபதி சுவாமிநாதன் நேற்று 'வாட்ஸ் ஆப்' மூலம் விசாரித்தார்.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி, அறநிலையத் துறை சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் வாதாடினர். இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: தேர் திருவிழாவை நிறுத்தும்படி உத்தரவிட அறநிலைய துறை ஆய்வாளருக்கு அதிகாரம் இல்லை. அவரது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

தேர் திருவிழா சுமுகமாக நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியது அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கடமை. தேர் திருவிழா பாதுகாப்புடன் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். சாலைகளை உள்ளாட்சி அமைப்பு சீர் செய்ய வேண்டும். தேரோட்டத்தின்போது மின் இணைப்பை மின் வாரியம் துண்டிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE