கர்நாடக பா.ஜ., அறிக்கை: இது தான் தன் கடைசி தேர்தல் என, பல ஆண்டுகளாக கூறியபடி இருந்த, காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா, முதல்வர் ஆசையை இன்னும் விடவில்லை. இன்னொரு தலைவரான சிவகுமாரின் ஆசையை, தண்ணீர் ஊற்றி அணைக்கும் வேலையை, சித்தராமையா கோஷ்டி செய்கிறது. குலுக்கல் முறையில் முதல்வர் வேட்பாளரை காங்., மேலிடம் முடிவு செய்யுமா?
எதிரி கட்சிக்குள் சண்டை நடந்தால், நமக்கு கொண்டாட்டம் தான்; மறுக்கவில்லை. ஆனால், உங்க கட்சிக்குள்ளேயே நிறைய அடிதடி நடக்குதே! 'மாஜி' முதல்வர் எடியூரப்பாவும், தற்போதைய முதல்வர் பொம்மையும், போடுற போட்டியைப் பார்த்தா, தலை சுத்துதே!
பா.ஜ., மாநில துணைத்தலைவர் கனகசபாபதி அறிக்கை: கோவை பாரதியார் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, 'ஹிந்தி மொழி கற்றுக் கொண்டால் வேறு மாநிலங்களில் வேலை கிடைக்கும் என்று சொல்கின்றனர்; ஹிந்தி மொழி பேசும் மக்கள் தமிழகத்தில் பானிப்பூரி விற்கின்றனர்' என, தரம் தாழ்த்தி பேசி இருக்கிறார். உயர் கல்வித்துறை அமைச்சர் இப்படி பேசுவது கண்டனத்துக்குரியது.
கொரோனா ஊரடங்கின்போது, 'புலம்பெயர் தொழிலாளர்கள்' என, இவர்களுக்காக தான், முதல்வர் ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடித்தார். அதை மறந்தார் பொன்முடி. 'மேல் மாடி காலி' தானோ?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: ஈரோடு எல்லப்பாளையத்தைச் சேர்ந்த நுால் வணிகர் ராதாகிருஷ்ணன், கள்ள லாட்டரியில், 62 லட்சம் ரூபாயை இழந்ததால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே ஒருபுறம், 'ஆன்லைன்' சூதாட்டம் உயிர்களை பலிவாங்கும் நிலையில், கள்ள லாட்டரியும், மனித வேட்டையை துவங்கினால் மக்கள் தாங்க மாட்டார்கள். எனவே, தமிழகத்தில் கள்ள லாட்டரியை அறவே ஒழிக்க வேண்டும்.

ஏற்கனவே, கஞ்சா கடத்தல், போதை விற்பனை, கொள்ளை, கொலை, கட்சியினர் அராஜகம், மாநகராட்சியில் ரகளை என, முழி பிதுங்கி நிற்குது அரசு... இந்தப் பிரச்னையையும் 'எடுத்து'க் கொடுத்தீங்கன்னா, தாங்குமா?
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேச்சு: சுற்றுலா பயணியர், 20க்கும் மேற்பட்டோர் கூடும் இடங்களில் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
நீங்கள் சொல்வது யார் காதில் விழப் போகிறது? எங்கேயும், முக கவசம் அணியும் பழக்கமே விட்டுப் போச்சு. கொரோனா பாதிப்பு அதிகமாகி விடக் கூடாதே என்ற உங்கள் அக்கறையைப் பாராட்ட தான் வேண்டும்!
மக்கள் நீதி மய்ய அறிக்கை: மேல்மருவத்துார் அருகே மது போதையில் இருந்த பயணி தாக்கியதில், அரசு பேருந்து நடத்துனர் பெருமாள் உயிரிழந்துள்ளார். இளைஞர்கள் முதல், முதியவர்கள் வரை போதைக்கு அடிமையாகி, குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. மது விற்பனையை கட்டுப்படுத்தி, விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை அதிகரித்தால், சமுதாயச் சீரழிவைத் தடுத்து நிறுத்தலாம்.
ஆங்... சரிங்க!