மயிலாடுதுறை: தனியார் நிறுவன வளாகத்திற்குள் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலியானார்.
சீர்காழி அருகே தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்திற்குள் சென்றவர் மின்சாரம் தாக்கி பலியானார். அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அலுவலகம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் ரவி,55, கூலி தொழிலாளி. இவர் காத்திருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டில்களை பொறுக்கி விற்று வருவாய் ஈட்டி வந்துள்ளார்.
இன்று (மே 16) காலை வழக்கம் போல் ரவி காத்திருப்பு டாஸ்மாக் கடை அருகே காலி பாட்டில்களை பொறுக்கிக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் அருகிலுள்ள நான்கு வழிச்சாலை அமைக்கும் வில்ஸ்பன் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வளாகத்திற்குள் சென்று அங்கு கிடந்த காலி மது பாட்டில்களை சேகரித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தனியார் நிறுவனத்தினர் அமைத்திருந்த போக்கஸ் லைட்டிலிருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ரவி பலியானார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்தில் பலியான ரவியின் உடலை எடுக்க மறுத்து அவருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம் - காரைக்கால் இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பாகசாலை இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE