சென்னை: தகுதி வாய்ந்த மாணவர்களை உருவாக்க இந்த அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதாகவும், இதனால் வேலை கிடைக்கவில்லை என மாணவர்களும், தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என நிறுவனங்களும் கூறக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும், இது மாணவர்களுக்கான அரசு என பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
சென்னை பல்கலையின் 164வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: பல்வேறு நிறுவனங்களும் வேலைகள் இருக்கின்றன, ஆனால் அதற்கு தகுதியான இளைஞர்கள் இல்லை என்கின்றன. தமிழக மாணவர்கள் அறிவில், சிந்தனையில் மேன்மை பெற்றவர்களாக உயர வேண்டும் என்பதே என் ஆசை. மாணவர்களை அனைத்து வகையிலும் தகுதியானவர்களாக உருவாக்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கிறது. எனவே தகுதிவாய்ந்த இளைஞர்களை உருவாக்கவே ‛நான் முதல்வன்' என்னும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தியுள்ளது.

பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும், இடைநிற்றலை தடுக்கவும் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வேலை கிடைக்கவில்லை என மாணவர்களும், தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என நிறுவனங்களும் கூறக்கூடாது. இது மாணவர்களுக்கான அரசு என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். பட்டங்களை தாண்டி சமூக அறிவையும் நீங்கள் பெற வேண்டியது அவசியம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கும் மிகப்பெரிய சொத்து இந்த கல்வி தான். இவ்வாறு அவர் பேசினார்.