பெரம்பலூர்: தொலைதூர பேருந்திற்கான கட்டண உயர்வு பட்டியல் அரசு அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறிய போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், கட்டண உயர்வு குறித்து முதல்வர் இதுவரை உத்தரவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே புதிய வழித்திடத்தில் அரசு பேருந்து போக்குவரத்தினை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொலைதூர பேருந்திற்கான கட்டண உயர்வு பட்டியல் அரசு அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டு விட்டது. ஆந்திரா, கேரளா அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயணப் பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து அதற்கேற்ப அதிகாரிகள் கட்டனத்தை நிர்ணயித்துள்ளனர். கட்டண உயர்வு குறித்து முதல்வர் இதுவரை உத்தரவிடவில்லை.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. போக்குவரத்து கழகம் 48 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனில் உள்ளது. மாநில உரிமைகளில் எந்தவித சமரசமும் இன்றி முதல்வர் செயல்படுகிறார். ஆதினங்கள் கேட்டுக்கொண்டதாலேயே பட்டனபிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருநங்கைகளால் பேருந்து பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிவசங்கர் கூறினார்.