வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் கிட்டத்தட்ட 80 சதவீத பகுதிகள் ஆக்கிரமிப்பு தான் எனவும், அதனை பா.ஜ., அதிகாரத்தில் இருக்கும் மாநகராட்சியினர் இடித்து விடுவார்களா என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
டில்லியில், மாநில ஆட்சியில் ஆம்ஆத்மி கட்சியும், உள்ளாட்சியில் பா.ஜ.,வும் இருந்து வருவதால், அடிக்கடி இந்த இரு கட்சிகளுக்கு இடையே மோதல்போக்கு நிலவுகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற டில்லி மாநகராட்சி உத்தரவிட்டதுடன், பல பகுதிகளில் புல்டோசர்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றியது. இது தொடர்பாக ஆம்ஆத்மி கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியதாவது: டில்லி மாநிலமானது திட்டமிடப்பட்ட முறையில் உருவாக்கப்படவில்லை. டில்லியில் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் ஆக்கிரமிப்பு மற்றும் சட்ட விரோதமானவை எனக் கூறலாம். அப்படியானால் 80 சதவீத பகுதிகளையும் பா.ஜ., அதிகாரத்தில் இருக்கும் மாநகராட்சியினர் இடித்து விடுவார்களா? இது சுதந்திர இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய அழிவாக இருக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை ஆம்ஆத்மியால் பொறுத்துக்கொள்ள முடியாது.
டில்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ., அதிகாரத்தில் இருந்தது. இந்த 15 ஆண்டுகாலத்தில் பா.ஜ., என்ன செய்தது? தேர்தல் நடக்கட்டும், புதிய மாநகராட்சி நிர்வாகம் ஒரு முடிவை எடுக்கட்டும். ஆக்கிரமிப்பு பிரச்னையை தீர்ப்போம் என்று டில்லிவாசிகளுக்கு உறுதி அளிக்கிறோம்; அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்துவோம். டில்லியில் சேரிகளை அகற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.