பல்லாவரம்,-நெரிசலை குறைக்கும் வகையில், பல்லாவரம் மேம்பாலத்தில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதிப்பது குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பரசன், நேற்று ஆய்வு செய்தார்.
பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி.,- - குன்றத்துார் சாலைகள் சந்திப்பை, தினசரி, ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, அந்த சந்திப்பில், 'பீக் ஹவர்' நேரத்தில், கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது.பல ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு தீர்வாக, பல்லாவரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இம்மேம்பாலம், இருபாதைகள் கொண்ட, ஒரு வழி மேம்பாலமாகும். அதன்படி, குரோம்பேட்டையில் இருந்து, சென்னைக்கு செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தில் ஏறி, பாதுகாப்பு துறை குடியிருப்பு அருகே இறங்க வேண்டும்.அதேநேரத்தில், கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், வழக்கம்போல், ஜி.எஸ்.டி., சாலை வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. ஜி.எஸ்.டி., சாலையில் வரும் வாகனங்கள், குன்றத்துார் சாலைக்கு செல்ல, பாண்ட்ஸ் சிக்னல் வரை சென்று, 'யு - டர்ன்' எடுத்து, குன்றத்துார் சாலைக்கு திரும்ப வேண்டும்.ஜமீன் பல்லாவரம், ஈஸ்வரி நகர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், மேம்பாலத்தில் ஏற வேண்டும் என்றாலோ, குன்றத்துார் சாலைக்கு செல்ல வேண்டும் என்றாலோ, இதே நடைமுறை தான். இதனால், பல்லாவரத்தில், மேம்பாலம் கட்டியும், நெரிசல் குறையவில்லை. வழக்கம் போல், 'பீக் ஹவர்' நேரத்தில், கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. 'இதற்கு தீர்வாக, கிண்டியில் இருந்து வரும் வாகனங்களும், மேம்பாலத்தில் ஏறி, இறங்க அனுமதிக்க வேண்டும். கனகர வாகனங்களுக்கு சாத்தியமில்லை என்றாலும், இலகு ரக வாகனங்களையாவது அனுமதிக்கலாம்' என்ற கோரிக்கை எழுந்தது.இப்படி செய்தால், தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் ஓரளவிற்கு குறையும்.
இந்த நிலையில், பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று காலை, இம்மேம்பாலத்தை ஆய்வு செய்தார்.அப்போது, மீனம்பாக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தில் சிக்காமல், காலை மற்றும் மாலையில், மேம்பாலத்தில் ஏறி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறினார்.
அதற்கு ஆய்வு செய்து, போதிய நடவடிக்கை எடுப்பதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்.பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி, மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE