இடாநகர் : அருணாச்சல பிரதேசத்தில், தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்; ஒருவர் மாயமாகி உள்ளதால், அவரை தேடும் பணி நடந்து வருகிறது.வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதையடுத்து, தலைநகர் இடாநகரில் உள்ள மலை ஒன்றில், நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையடிவாரத்தில் இருந்த வீடுகளை மூடும் அளவுக்கு மண் சரிந்தது.
இதில், நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.இவர்களைத் தவிர பெண் ஒருவரும் காணாமல் போயுள்ளதால், அவர் மண்ணில் புதைந்து உயிர்இழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
அசாமில் வெள்ளம்
அசாம் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன; தகவல் தொடர்பு வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அசாமின் லும்பிங் பதார்பூர் பகுதியில் பலத்த மழை, நிலச்சரிவு காரணமாக இரண்டு ரயில்கள் சிக்கின. அவற்றில் இருந்த 2,800 பயணியர், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இரண்டு நாள் போராட்டத்துக்குப் பின், ஹெலிகாப்டர்கள் வாயிலாக அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE