திருப்பூர் : பஞ்சு விலையை கட்டுப்படுத்தக் கோரி, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் நேற்றும், இன்றும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 360 கோடி ரூபாய்க்கு உற்பத்தி முடக்கம் ஏற்பட்டுள்ளது.

போராட்டம்
இரு மாதங்களில் மட்டும் கிலோவுக்கு, 70 ரூபாய் நுால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அபரிமிதமான நுால் விலையால், ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு ஆடை தயாரிக்கவும், புதிய ஆர்டர்களை பெறவும் முடியாமல், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் தவிக்கின்றனர்.
இதனால், உற்பத்தி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்த தொழில் அமைப்பினர், இரண்டு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை நேற்று துவக்கினர்.தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம்.உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்கம் உட்பட ஆடை உற்பத்தி மற்றும் 'ஜாப் ஒர்க்' சார்ந்த, 30க்கும் மேற்பட்ட சங்கங்கள் இப்போராட்டத்தை நடத்துகின்றன.
இரண்டு நாள் விடுப்பு
திருப்பூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு, பின்னலாடை சரக்குகளை ஏற்றிச் செல்லும் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.ரயில்வே ஸ்டேஷன் அருகே காதர்பேட்டையில் உள்ள 500க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை பின்னலாடை வர்த்தக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இரண்டு நாள் விடுப்பு என்பதால், தொழிலாளர்கள் சிலர், சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.'ஸ்டிரைக்' காரணமாக, திருப்பூரில் 100 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி; 80 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டு உற்பத்தி என, நாளொன்றுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி முடங்கிஉள்ளது.இரண்டு நாள் போராட்டத்தால், மொத்தம் 360 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி முடங்கும் என கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE