ஊழலுக்கு செஞ்சாங்க உதவி...மறுபடியும் வாங்கீட்டாங்க பதவி!

Added : மே 17, 2022 | |
Advertisement
உப்பிலிப்பாளையம் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்ததும், வண்டியை முறுக்கி ரோட்டைக் கடக்கும்போது, குறுக்கே வேகமாகக் கடந்த பைக்கைப் பார்த்து, மித்ரா பதறிப்போனாள். பின்னால் உட்கார்ந்திருந்த சித்ரா, 'மித்து...!' என்று கத்தியே விட்டாள். ஆனால் குடையில் இருந்த டிராபிக் போலீசும், ஓரத்தில் நின்ற போலீசும் எதையுமே கண்டு கொள்ளவில்லை. கொந்தளிப்போடு பேசினாள் மித்ரா...''அக்கா!
ஊழலுக்கு செஞ்சாங்க உதவி...மறுபடியும் வாங்கீட்டாங்க பதவி!

உப்பிலிப்பாளையம் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்ததும், வண்டியை முறுக்கி ரோட்டைக் கடக்கும்போது, குறுக்கே வேகமாகக் கடந்த பைக்கைப் பார்த்து, மித்ரா பதறிப்போனாள். பின்னால் உட்கார்ந்திருந்த சித்ரா, 'மித்து...!' என்று கத்தியே விட்டாள்.

ஆனால் குடையில் இருந்த டிராபிக் போலீசும், ஓரத்தில் நின்ற போலீசும் எதையுமே கண்டு கொள்ளவில்லை. கொந்தளிப்போடு பேசினாள் மித்ரா...''அக்கா! சிட்டிக்குள்ள இந்த சாப்பாடு டெலிவரி பண்றவுங்களோட அட்ராசிட்டி தாங்கவே முடியலை. அவுங்களுக்கெல்லாம் எந்த ரோடு ரூல்சும் பொருந்தாதுங்கிற மாதிரி, பைக்ல தாறுமாறாப் போறாங்க. ஹெல்மெட் போடுறதில்லை, போன்ல பேசிக்கிட்டே வண்டி ஓட்றது. ஒன்வேயில வர்றது. சிக்னலை மதிக்காம இப்படி குறுக்கால பறக்குறதுன்னு...இவுங்க அலும்பு எல்லை மீறுது!''பலமாகத் தலையாட்டி அதை ஒப்புக் கொண்ட சித்ரா, ''ஆமா மித்து! டிராபிக் போலீசுக்கு இந்த டெலிவரி கம்பெனிகள்ல இருந்து, மாசாமாசம் ஏதும் மாமூல் கொடுக்குறாங்களா என்னன்னு தெரியலை. ஆனா போலீஸ் கண்டுக்கிறதே இல்லை!'' என்றாள்.வண்டியை ஓட்டிக்கொண்டே அடுத்த 'டாபிக்'கை ஆரம்பித்தாள் மித்ரா...''நம்ம டிஸ்ட்ரிக்ட்ல 16 ஸ்டேட் ஹைவேஸ் ரோடுகளை சரி பண்ணப் போறாங்க. ஆனா கார்ப்பரேஷன் ரோடுகளை எப்போ சரி பண்ணுவாங்கன்னே தெரியலை. நிதி வந்துருச்சு... சீக்கிரமே வேலை ஆரம்பிக்கப் போறதா சொல்லிட்டே இருக்காங்களே தவிர, வேலை எதுவும் தொடங்குறதா தெரியலை!''''உண்மைதான்...ஆளும்கட்சி கவுன்சிலர்கள் ஜெயிச்சு வந்துட்டு, ரோட்டுல தலை காட்ட முடியாமத் தவிக்கிறாங்க. குடிநீர் குழாய் உடைப்பு மாதிரி சின்னச் சின்ன வேலைகளை கைக்காசைப் போட்டு செலவு பண்ணி சரி பண்றாங்க. அந்த காசைக் கொடுக்குறதுக்கே கார்ப்பரேஷன்ல இழுத்தடிச்சு, கவுன்சிலர்களுக்கே தண்ணி காட்றாங்களாம்!''''ஆனா அதிகாரிகள் சம்பாத்தியம் மட்டும் குறையலை...போன கவர்மென்ட்ல, அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு நெருக்கமா இருந்த கார்ப்பரேஷன் இன்ஜினியர்கள் ரெண்டு பேரு, ஊழலுக்கு உதவி பண்ணுனாங்கன்னு, அவுங்க வீட்டுல விஜிலென்ஸ் ரெய்டே நடத்துனாங்க. நம்ம ஊரு 'மாஜி'க்கு அவுங்க எவ்ளோ நெருக்கமா இருந்தாங்கன்னு இங்க இருக்குற தி.மு.க.,காரங்க அத்தனை பேருக்கும் தெரியும்...அவுங்க மேலேயே எந்த நடவடிக்கையும் எடுக்கலையே!''''நீ சொல்றது யார் யாருன்னு தெரியுது...அதுலதான் ஒருத்தரை துாத்துக்குடிக்கும், மதுரைக்கும் மாத்தி இருக்காங்களே...!''குறுக்கே புகுந்து சித்ரா சொன்ன பதிலுக்கு, அடுத்த ஆதாரத்தை அடுக்கினாள் மித்ரா...''ஆமாக்கா...கொஞ்ச நாளைக்கு 'வெயிட்டிங்'ல வச்சிட்டு, இப்போ மறுபடியும் நல்ல பதவி கொடுத்துட்டாங்கன்னா, ரெண்டு கட்சிக்கும் இடையில ஊழல் விஷயங்கள்ல 'டீலிங்' முடிஞ்சிருச்சின்னுதானே நினைக்க வேண்டியிருக்கு...போன பீரியட்ல அ.தி.மு.க.,வுல பழிவாங்கப்பட்ட அதிகாரிகளோட 'பீலிங்' இதுதான்!''''ஆனா ஞானமுள்ள இன்ஜினியரோட முயற்சி மட்டும் பலிக்கலை போலிருக்கு. அவரும் ஆளும்கட்சியில யாரையோ பிடிச்சு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்திருக்காரு. ஆனா பெரிய ஆபீசர், சி.எம்.,ஆபீஸ்ல தனக்கு இருக்குற நெருக்கத்தை வச்சு, அவர் மறுபடியும் வராம தடுத்துட்டாராம். இப்போ இந்த இன்ஜினியர்கள் கோஷ்டியெல்லாம் சேர்ந்து, பெரிய ஆபீசரையே துாக்குறதுக்கு வேலை பாக்குறாங்களாம்!''''நானும் அப்பிடித்தான்க்கா கேள்விப்பட்டேன்...யாரு வந்தாலும் இங்க வண்டி ஓட்றது கஷ்டம்தான்...இன்னொரு விஷயம் தெரியுமா... கார்ப்பரேஷன் இன்ஜினியர்கள் கொஞ்சம் பேரு, பில்லுார் போயிருக்காங்க. வழியில கருப்பராயன் கோவில்ல கிடா வெட்டி சாமி கும்பிட்ருக்காங்க. வேண்டுதல் என்ன தெரியுமா...பெரிய ஆபீசர் சீக்கிரமே இந்த ஊரை விட்டுப் போகணும்கிறதுதான்!''சித்ரா சொன்னதைக் கேட்டுச் சிரித்த மித்ரா, தி.மு.க., கொடி போட்ட ஒரு வண்டியைப் பார்த்ததும், அரசியல் தகவலுக்குத் தாவினாள்...''தி.மு.க., தேர்தல்ல ஜெயிக்கிறதுக்கு, அதை விட அதிகமா ஆளும்கட்சிக்காரங்க வேண்டுதல் வச்சிட்டு இருக்காங்க...பேருக்குதான் எலக்சன் நடக்குது...போஸ்ட்டிங் போடுறது எல்லாம் வேண்டிய ஆளுகளுக்கு மட்டும்தான். முடிஞ்ச வரை பேசி முடியுங்க. தேர்தல் நடத்துன மாதிரியும் இருக்கணும்; ஆனா நடத்தவும் கூடாதுங்கிறதுதான் தலைமையோட உத்தரவாம்!''''ஊழல் விஷயத்துல மட்டுமில்லை; உட்கட்சித் தேர்தல்லயும் ரெண்டு திராவிடக் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாதுன்னு, ஆளும்கட்சிக்காரங்களே புலம்புறாங்க. ''இதுவும் ஆளும்கட்சி மேட்டர்தான்...சின்னியம்பாளையத்துல தி.மு.க., பொதுக்கூட்டம் நடத்திருக்காங்க. மினிஸ்டர், திருச்சி சிவா எம்.பி.,எல்லாம் பேசுனாங்க. ஆனா கூட்டத்துக்கு கூட்டிட்டு வந்த ஆளுகளுக்கு பணமே கொடுக்கலையாம். ஆனா வராமலே பல பேருக்கு பணம் பட்டுவாடா ஆயிருச்சாம். வந்த பொம்பளைங்க திட்டித் தீர்த்துட்டே போயிருக்காங்க!''''பணப்பட்டுவாடான்னதும் ஞாபகம் வருது...யுனிவர்சிட்டியில நிருபர்களுக்கு 'கவர்' கொடுத்த விவகாரத்துல, 'எனக்கு எதுவுமே தெரியாது'ன்னு வி.சி.,பல்டி அடிச்சிட்டாரு. வி.சி.,க்குத் தெரியாம, ஒரு பைசா கூட அங்க யாரும் செலவழிக்க முடியாதுன்னு ஊரு, உலகத்துக்கே தெரியும். இப்போ கவர்னர் கடுப்பானதால, கண் துடைப்புக்கு ஒரு கமிட்டி போட்ருக்காங்க!''''யுனிவர்சிட்டி கொடுத்த பையிலதான், அந்த 'கவர்' இருந்திருக்கு. கவர்னர் விழாவுல 'கான்ட்ரவர்சியா' எதுவும் செய்தி வந்துரக்கூடாதுன்னுதான் 'கவர்' கொடுக்கவே ஏற்பாடு பண்ணிருக்காங்க. கடைசியில 'கவர்' கொடுத்ததே பெரிய 'கான்ட்ரவர்சியா' ஆயிருச்சு!''''அக்கா! லீவுல குழந்தைகளால தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்புல் ஆயிட்டு இருக்கு. ஆனா ஒரு சில தியேட்டர்களைத் தவிர, பெரும்பாலான தியேட்டர்கள்ல கவர்மென்ட் பிக்ஸ் பண்ணுன ரேட்டுல டிக்கெட் கொடுக்குறதே இல்லை... முதல் வரிசையில 60 ரூபாய்க்கு விக்க வேண்டிய டிக்கெட்டை 190 ரூபாய்க்கு விக்கிறாங்களாம். அதை விட தியேட்டர்கள்ல 'ஸ்நாக்ஸ்'ல அடிக்கிற கொள்ளைக்கு அளவேயில்லை!''''பல தியேட்டர்கள்ல 'கவுன்டர்'ல டிக்கெட் கொடுக்குறதே இல்லை. ஆன்லைன்ல அதிக விலைக்கு விக்கலாம்னு நேர்ல வர்றவுங்கள்ட்ட, 'டிக்கெட் இல்லை'ன்னு திருப்பி அனுப்பிடுறாங்க''. ''அதற்கு சித்ரா, ''நம்ம ஊர்ல தியேட்டர் விட்டா பொழுது போக்க எங்க இடம் இருக்கு...புதுசா ஸ்டேடியம், இண்டோர் கேம் ஸ்டேடியம் கட்றோம் கட்றோம்னு, காலத்தை ஓட்டிட்டே இருக்காங்க. பாதிக்கு மேல பார்க்குகளும் புதர் மண்டித்தான் கிடக்கு...விளையாடுற பசங்களுக்கு கிரவுண்ட்டே இல்லை... !'' என்றாள்.''மே 13, 14, 15 மூணு நாளு ஸ்டேட் லெவல் சீனியர்ஸ் அத்லெடிக் போட்டி நேரு ஸ்டேடியத்துல நடந்துச்சுல்ல...அதுல ஆயிரத்துக்கும் மேல வீரர்கள், வீராங்கனைகள் கலந்துக்கிட்டாங்க. ஆனா போட்டி முடிஞ்சு ஸ்டேடியம் டாய்லெட்களைப் பார்த்தப்போதான், அவுங்க ஜெயிச்ச ரகசியம் தெரிஞ்சது!''''என்ன மித்து சொல்ற?''''சொல்லவே வேதனையா இருக்குக்கா...ஸ்டேடியத்தோட டாய்லெட், பாத்ரூம்ல எல்லாம் ஊசி, சிரிஞ்சு, காலி மருந்து பாட்டில் எக்கச்சக்கமா இருந்திருக்கு...இதைப் போட்டுட்டுதான் போட்டியில பல பேரு கலந்திருக்காங்க. சீனியர்ஸ் இப்பிடிச் செஞ்சா, ஜூனியர்ஸ் என்ன பண்ணுவாங்க?''''கொடுமைதான்...மித்து...அந்த போலீஸ் ஏ.சி., மேட்டர் விசாரிச்சிட்டு இருக்கேன்...அப்புறம் சொல்றேன். இப்போ வண்டியை நிறுத்து. தலை வலிக்குது...ஒரு காபி சாப்பிடலாம்!'' சித்ரா சொன்னதும், காபி ஷாப் அருகே வண்டியை ஓரம் கட்டினாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X