வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சோழவரம்,--கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளையர்களின் அட்டூழியத்தால், கரைகள் வெட்டி சேதப்படுத்தப்படுகின்றன. இதனால், அவை, உடையும் அபாயம் நிலவுகிறது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியில் துவங்கி, வேலுார் மாவட்டம், காவேரிப்பாக்கம் வழியாக, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கத்தை அடையும் கொசஸ்தலை ஆறு, 136 கி.மீ., பயணித்து, எண்ணுாரில் உள்ள வங்காள விரிகுடா கடலில் சென்று முடிகிறது.மழைக்காலத்தில், பூண்டி நீர்த்தேக்கத்தில் திறந்து விடப்படும் உபரி நீர், தாமரைப்பாக்கம், சீமாவரம் வழியாக, கடலில் கலக்கிறது.கடந்த 2015ம் ஆண்டு, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோழவரம் அடுத்த, நெற்குன்றம், கண்ணியம்பாளையம், புதுகுப்பம் ஆகிய இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, மழை நீர் கிராமங்களையும், விளை நிலங்களையும் மூழ்கடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டும், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும், சீமாவரம், செக்கஞ்சேரி, கவுண்டர்பாளையம், பசுவன்பாளையம் ஆகிய கிராமங்களில் கரைகள் சேதம் அடைந்தன.உடைப்பு ஏற்படும் நிலையில், அங்கு பொதுப்பணித் துறையினர் மணல் மூட்டைகளை போட்டு பலப்படுத்தியதால், பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன.ஆற்றின் கரையோரப் பகுதிகளில் நடைபெறும் மணல் கொள்ளையால், கரைகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன.கடந்த ஆண்டு பெய்த மழையால், ஆற்றில் தண்ணீர் தேங்கியிருந்ததை தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெறாமல் இருந்தது.
தற்போது, ஆற்றில் நீர் இருப்பு முற்றிலும் குறைந்து, ஆங்காங்கே சிறு, சிறு குட்டைகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது.இதற்காகவே காத்திருந்த மணல் கொள்ளையர்கள், ஆற்றின் கரையோரங்களில், மணல் கொள்ளையை அரங்கேற்றி வருகின்றனர்.கரையோரங்களில் மணல் எடுப்பதால், கரைகள் பலவீனமாகி வருகின்றன.ஏற்கனவே பலவீனமாக இருந்த இடங்களில், பொதுப்பணித் துறையினர் மணல் மூட்டைகளை போட்ட நிலையில், அதே பகுதிகளில் தற்போது மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது.இரவு, பகல் என, ஆற்று மணலை வெட்டி, மூட்டையாக கட்டி கரைக்கு கொண்டு வந்து, அவற்றை டிராக்டர், சிறு லாரிகளில் ஏற்றி வெளியிடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
மணல் கொள்ளையர்களின் அட்டகாசத்தால், கொசஸ்தலை ஆற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.சோழவரம் அடுத்த, அகரம், ஜெகன்னாதபுரம், காரனோடை என பல்வேறு கிராமங்களில் மணல் கொள்ளை நடைபெறுகின்றன. இதனால் கரைகள் பலவீனமாகி வருகின்றன.மணல் கொள்ளையை தடுக்காவிட்டால், மழைக்காலங்களில் எளிதாக கரைகள் உடைந்து, கிராமங்களிலும், விளை நிலங்களிலும் பாதிப்புக்கு வழி வகுக்கும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.அச்சமாக உள்ளது
மணல் கடத்தலால் கரைகள் பலவீனமாகி வருகின்றன. மழைக்காலம் வந்தாலே, கரையோரங்களில் வசிக்கும் கிராமமக்கள் அச்சத்திற்கு ஆளாகின்றனர். ஒரு சிலர் செய்யும் செய்கையால் ஒட்டு மொத்த கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றன. மணல் கொள்ளை குறித்து தகவல் தெரிவிக்கவும் அச்சமாக உள்ளது. காவல், வருவாய், பொதுப்பணித் துறையினர் இணைந்து, இதுபோன்ற மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெ.வினோத், சமூக ஆர்வலர், சோழவரம்.'நடவடிக்கை பாயும்'
மணல் கடத்தலை தடுப்பது குறித்து சோழ வரம் பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுப்பணித் துறை அலுவலர்கள், ஊழியர்கள் கரையோரங்களில் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மணல் கடத்தல் நடைபெறும் இடங்கள் குறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு செல்வதற்குள், மணல் கொள்ளையர்கள் தப்பி விடுகின்றனர். வாகனங்கள் செல்லாத வகையில் பள்ளங்களை ஏற்படுத்தி வருகிறோம்.
அந்தந்த கிராம தலைவர்களிடம் இதுகுறித்து தெரிவித்து, தகவல் தெரிவிக்கவும், மணல் கொள்ளையை தடுக்க உதவவும் அறிவுறுத்தி உள்ளோம். காவல் துறையிலும் புகார் தெரிவித்து, இரவு நேரங்களில் கண்காணிக்க வலியுறுத்தி உள்ளோம். மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழையின்போது, பாதிப்பிற்கு உள்ளான கரைகளை சீரமைக்க, திட்ட அறிக்கை தயாரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். மழைக்காலம் வருவதற்கு அவற்றை சீரமைக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE