திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பள்ளி மாணவர் கொலையில், சம்பந்தப்பட்ட மேலும் சிலரை கைது செய்ய வலியுறுத்தி, கம்யூ., கட்சியினர் மற்றும் மாணவரின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த கீரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் கோகுல், 17; திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
இவர், கடந்த 14ம் தேதி இரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், இவரை அழைத்துச் சென்ற சக மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அந்த மாணவர் அளித்த வாக்குமூலம்:மூன்று மாதங்களுக்கு முன், என் நடவடிக்கையை சுட்டிக்காட்டி அடிக்கடி கோகுல் மற்றும் சில மாணவர்கள் கிண்டல் செய்தனர். இதுதொடர்பாக, பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்தனர். வகுப்பு ஆசிரியர் மாணவர்களை கண்டித்தார்.இருப்பினும், தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.குறிப்பாக, கோகுல் என்னைப் பற்றியும், என் குடும்பத்தாரை பற்றியும் அவதுாறாக பேசி வந்தார். சில நாட்களுக்கு முன் என் அக்காவை பற்றி தவறாக கூறியதால், கோகுலை கொலை செய்ய முடிவு செய்தேன்.
இதற்காக திட்டமிட்டு, பார்ட்டி கொடுப்பதாக அழைத்துச் சென்று மறைவான இடத்தில் 'பிரைட் ரைஸ்' சாப்பிட வைத்தேன். கோகுல் சாப்பிட்டுக் கொண்டே மொபைல் போன் பார்த்துக் கொண்டிருந்தார்.அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினேன். பேனா கத்தியால் வயிறு உள்ளிட்ட இடங்களில் குத்திக் கொலை செய்தேன்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலீசார், அந்த மாணவரை கைது செய்தனர்.இக்கொலையில் மேலும் சிலர் ஈடுபட்டு இருக்கக்கூடும்; அவர்களையும் கைது செய்ய வேண்டும் என, கீரனுார் பை - பாஸ் சாலையில் கோகுல் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர் என, போலீசார் உறுதி அளித்ததை அடுத்து, மறியல் கைவிடப்பட்டு, கோகுல் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE