வேலுார் : வேலுாரில், அமைச்சர்கள்பங்கேற்ற நிகழ்ச்சியில், கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற தி.மு.க.,வினரை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.வேலுார் மாவட்ட ஹிந்து சமய அறங்காவலர் குழு நிர்வாகிகள் பதவியேற்பு விழா, வேலுார் செல்லியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்சேகர்பாபு தலைமை வகித்தார்.

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும்அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த விழாவில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றனர்.இதை 'வீடியோ' எடுத்து, சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ வேகமாக பரவியதைத் தொடர்ந்து, கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றவர்களை கண்டித்தும், அவர்களை கண்டிக்காத அமைச்சர்களை கண்டித்தும் ஹிந்து முன்னணியினர் நேற்று காலை கோவில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின், கோவிலில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவிலில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் எனவும், ஹிந்து முன்னணியினர் கோஷங்களைஎழுப்பினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:இங்கு பொறுப்பேற்றவர்கள் மாவட்டம் முழுதும் உள்ள கோவில்களுக்கு சரியான நபர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். குடிகாரன், கோவில் நிலத்தை அபகரிப்பவனை பொறுப்புகளில் அமர்த்தக் கூடாது. அப்படி நியமித்தால் உங்களை பதவியிலிருந்து எடுத்து விடுவோம்.அறநிலையத் துறை சார்பில் நடத்தப்படும் அரசு விழாக்களில், தேவாரம், திருவாசகம் பாடட்டும்; கவலையில்லை. அறநிலையத் துறையும் அரசு துறை தான். அது சார்ந்த விழாவும், அரசு நிகழ்ச்சி தான். அதனால், அறநிலையத் துறை நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்.இங்கு விழாவில், ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது எனக்கு வருத்தம். இனி நடக்கும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். வரும் நாட்களில் இதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென அறநிலையத் துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE