வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை :சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, 5,855 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு அடுக்கு மேம்பால சாலை அமைக்க, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று, ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்தை, வரும் ௨௬ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கிறார்.
சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை பைபாஸ் சாலை இணையும் சந்திப்பாக மதுரவாயல் உள்ளது. இச்சாலை வழியாக சென்னை, எண்ணுார் துறைமுகங்களுக்கு நாள்தோறும் ஏராளமான கன்டெய்னர் லாரிகள், சரக்கு வாகனங்கள் வந்துசெல்கின்றன.சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பதால், இரவு நேரங்களில் மட்டுமே இந்த வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இதனால், துறைமுகங்கள் வாயிலாக வர்த்தகத்தை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, சென்னை துறைமுகம் - மதுரவாயல்- இடையே, உயர்மட்ட மேம்பாலச்சாலை அமைக்க 2009ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. இதற்காக, 1,815 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும், கூவம் கரையிலும், இதற்காக துாண்கள் அமைக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், 2011ம் ஆண்டு தமிழகத்தில் பொறுப்பேற்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசு, மேம்பாலச் சாலையின் துாண்களால், கூவத்தில் நீரோட்டம் பாதிப்பதாக கூறி, இந்த திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்தது.இந்நிலையில், 'வருங்கால போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும்' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.
விரிவான திட்ட அறிக்கை
இதன்படி, 5,855 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு அடுக்கு மேம்பாலம் சாலை அமைக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது உருவாகியுள்ள ஒப்பந்தம் மூலம், இத்திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது.இந்த திட்டத்தின்படி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழியாக, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான, 20.565 கி.மீ., நீளத்திற்கு, 5,855 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு அடுக்கு மேம்பால சாலை அமைக்கப்படும்.இந்த இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையில், சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை, முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையில், 13 இடங்களில் வாகனங்கள் ஏறும், இறங்கும் சாய் தளங்களுடன், சாலை அமைக்கப்பட உள்ளது.இரண்டாவது அடுக்கில், துறைமுகம் முதல் மதுரவாயல் வரை, இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டு விழா
நீண்ட காலமாக, பல்வேறு காரணங்களால் நிலுவையில் இருந்த இப்பணியை செயல்படுத்தும் வகையில், தலைமைச் செயலகத்தில் தமிழக அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு இடையே, இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு, நெடுஞ்சாலைகள் துறை முதன்மை செயலர் கோபால், சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் முதன்மைப் பொது மேலாளர் கோடாஸ்கர், தமிழகம், புதுச்சேரிக்கான கடற்படை உயர் அதிகாரி புனித் சத்தா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, பிரதமர் மோடி தலைமையில், 26ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ளது.
இரண்டாவது இரண்டடுக்கு மேம்பாலம் இரண்டடுக்கு மேம்பால சாலைக்காக, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஓரடுக்கு மேம்பால திட்ட அறிக்கையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரவாயலில் இருந்து 600 மீட்டரும், நேப்பியர் பாலத்தில் இருந்து 356 மீட்டரும் கூடுதலாக மேம்பாலம் அமையவுள்ளது. இதனால், மேம்பாலத்தின் நீளம் 20.5 கி.மீ.,யாக அதிகரித்துஉள்ளது. சென்னை நுாறடிச் சாலையில், மெட்ரோ ரயில் பாதைக்கு துாண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வடபழநியில் இந்த துாண்களின் கீழ்பகுதியில்,வாகனங்கள் பயன்பாட்டிற்காக, மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இதே பாணியில், -சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே, இரண்டடுக்கு மேம்பாலம் அமையஉள்ளது. கீழ் அடுக்கு அகலம் அதிகமாகவும், மேல் அடுக்கு அகலம் குறைவாகவும் அமைக்கப்படவுள்ளது. இந்த மேம்பாலச்சாலை வாயிலாக, சென்னையின் அடுத்த 50 ஆண்டுக்கான போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE