தமிழக நிகழ்வுகள்:
எஸ்.ஐ., மகன் உட்பட 5 பேர் : கஞ்சா வைத்திருந்ததாக கைது
புதுக்கோட்டை :புதுக்கோட்டையில், கஞ்சா வைத்திருந்த எஸ்.ஐ., மகன் உட்பட ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1.25 கிலோ கஞ்சா மற்றும் பைக், நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுக்கோட்டை மாவட்டம், குன்னம்வயல் பகுதியில் திருக்கோகர்ணம் போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தி, சோதனை செய்தனர்.அப்போது, டேங்க் கவரில் 20க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. தொடர்ந்து, பைக்கில் வந்த இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் பிரிதிவிராஜ், 26, குன்னவயல் பகுதி மதி, 32, துாத்துக்குடியைச் சேர்ந்த கியாபோஸ், 23, ஆகியோரை திருக்கோகர்ணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.இதில், கியாபோஸ் என்பவர் போலீஸ் எஸ்.ஐ., குமாரவேல் என்பவரின் மகன் என்பதும், திருச்சியில் தனியார் கல்லுாரியில் படித்து வருவதும்தெரிந்தது.அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா வினியோகம் செய்த திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா, 20, மணப்பாறையைச் சேர்ந்த அன்புச்செழியன், 19, ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து, 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல்செய்தனர்.கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடம் இருந்து, மொத்தம் 1.25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பைக் மற்றும் நான்கு மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.திருக்கோகர்ணம் போலீசார், ஐந்து பேரையும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தன் இரு குழந்தைகளை கொன்ற தாய்
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே குடும்ப பிரச்னை காரணமாக தான் பெற்ற இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்து தாய் கொலை செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஊராட்சி கருப்பர்கோவில்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி, பொன்னடைக்கன் (30) இவரது பஞ்சவர்ணம்(24). இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் ஜெகதீசன்(2) என்ற ஆண் குழந்தையும், தர்சியா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
பொன்னடைக்கன் பொள்ளாச்சியில் தேங்காய் உரிக்கும் கூலிவேலை பார்த்து வந்துள்ளார். தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ள நிலையில் பொன்னடைக்கன் கோவில் திருவிழாவிற்காக கருப்பர்கோவில்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது, பஞ்சவர்ணத்தின் தாயார் குடும்ப பிரச்னையை பேசி முடிக்க நினைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.
இந்நிலையில் குடும்ப பிரச்னையை நினைத்து மன விரக்தி அடைந்த பஞ்சவர்ணம் நேற்று இரவு 11 மணிக்கு தான் பெற்ற இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இத்தகவலை அவரது அம்மாவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததோடு தானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி சென்றுள்ளார்.
இதனால் பதறிய பஞ்சவர்ணத்தின் தாயார் சின்னப்பிள்ளை (55) என்பவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளார். அக்கம்பக்கத்தினர் சென்று பார்க்கையில் அங்கு அவரது குழந்தைகள் இருவரும் சடலமாக கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தைகளின் பிரேதங்களை கைப்பற்றி பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்னை காரணமாக பெற்ற தாயே குழந்தைகளை கொன்றது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாம்பழம் சாப்பிடுவதில் தகராறு மாணவருக்கு கத்திக்குத்து
கிருஷ்ணகிரி, :மாம்பழம் சாப்பிடுவதில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், 10ம் வகுப்பு மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பன்னிஹள்ளிபுதுாரில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 13ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த சிறப்பு வகுப்பில், இரு மாணவர்களுக்குள் மாம்பழம் சாப்பிடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் நடந்த சிறப்பு வகுப்பிற்கு, தகராறில் ஈடுபட்ட ஒரு மாணவர் வரவில்லை. அம்மாணவருக்கு மற்றொரு மாணவர், மொபைல் போனில் 'மெசேஜ்' அனுப்பி இருந்தார்.அதில், 'நல்லவேளை இன்று நீ பள்ளிக்கு வரவில்லை; வந்திருந்தால் உன்னை கிழித்து தொங்க விட்டு இருப்பேன்' என, தெரிவித்திருந்தார்.நேற்று பள்ளிக்கு வந்த அம்மாணவர் முதுகில், சக மாணவர் கத்தியால் குத்தியுள்ளார்.படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள் மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காவேரிப்பட்டணம் போலீசார் கத்தியால் குத்திய மாணவரை கைது செய்தனர்.மாவட்ட சி.இ.ஓ., மகேஸ்வரி கூறுகையில், ''இந்த சம்பவம் அதிர்ச்சியாக உள்ளது. கொரோனா கால கட்டத்தில் பள்ளிகளுக்கு வந்து பாடம் கற்காததால், மாணவர்களிடையே ஒழுக்கநெறிகள் குறைந்திருப்பது வேதனை அளிக்கிறது,'' என்றார்.காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி கூறுகையில், ''மாணவனை கத்தியால் குத்திய சக வகுப்பு மாணவன் மீது, கொலை முயற்சி, மிரட்டல் விடுத்தது, ஒழுங்கீனமாக நடந்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளோம்.''மாணவர் மீது என்ன நடவடிக்கை என்பது பின்னர் தெரியவரும்,'' என்றார்.
இந்தியா நிகழ்வுகள்:
பாலக்காடு இரட்டை கொலை 25 பேருக்கு ஆயுள் தண்டனை
பாலக்காடு :கேரளாவில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த 25 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கேரளாவின் பாலக்காடு நகரில் வசிக்கும் நுாருதீன், ஹம்சா, குஞ்சு முகமது ஆகியமூவரும் உடன் பிறந்த சகோதரர்கள். இவர்கள் இடது ஜனநாயக முன்னணியை ஆதரிக்கும் ஏ.பி.சன்னி என்ற கட்சியின் உறுப்பினர்கள்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும், அந்த ஏ.பி.சன்னி கட்சியினருக்கும் இடையே மசூதிக்கு நன்கொடை வசூலிப்பது தொடர்பாக தகராறு இருந்தது.இந்நிலையில், 2013ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள்,இந்த மூன்று சகோதரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் நுாருதீன், ஹம்சா இருவரும் உயிரிழந்தனர்; குஞ்சு முகமது உயிர்தப்பினார்.இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த 25 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 1.15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, பாலக்காடு மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரஜிதா நேற்று தீர்ப்பளித்தார்.அபராதத் தொகையை உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
**************
உலகம் நிகழ்வுகள்;
தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு :ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
லகுனா வூட்ஸ் :அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்,ஒருவர் உயிரிழந்தார்; ஐந்து பேர் காயமடைந்தனர்.கலிபோர்னியா மாகாணத்தின் லகுனா வூட்ஸ் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு நிகழ்ச்சி நடந்தது.அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், நிகழ்ச்சியில் பங்கேற்றோர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஐந்து பேர் காயமடைந்தனர்.துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டு, தேவாலயத்திற்கு வந்த பாதிரியார் ஜெர்ரி சென், 72, தாக்குதல் நடத்திய நபரின் தலையில் நாற்காலியை வீசிதாக்கினார். இதில், அவர் வலி தாங்க முடியாமல் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின், அங்கிருந்தோர் அவரின் கால்களை, மின்சார கம்பியால் கட்டி வைத்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.அவர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் தெரியவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE