வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கோவில் ஒன்றில் பல கோடி மதிப்பிலான சுவாமி சிலைகளை திருடியவர்கள் அடுத்த சில நாட்களில் பயங்கரமான கனவுகள் வருவதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு, திருடிய சிலைகளை கோவில் அர்ச்சகரின் வீட்டின்முன் வைத்து தப்பியுள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் சித்ரகூட மாவட்டத்தின் தருஹா என்னும் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோவில் உள்ளது. இங்கு கடந்த மே 9ம் தேதி இரவு, பல கோடி மதிப்பிலான 16 சுவாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடா்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடா்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், திருடுபோன ஆறே நாட்களில் 16 சிலைகளில் 14 சிலைகளை அந்தக் கோவில் அர்ச்சகரின் வீட்டுக்கு அருகே இரவு நேரத்தில் திருடர்கள் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். கூடவே ஒரு கடிதத்தையும் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அதில், 'கோவிலில் சிலைகளைத் திருடியதில் இருந்து தொடர்ச்சியாக பயங்கரமான கனவுகளாக வருகின்றன. இதனால், நிம்மதி இழந்துவிட்டோம். எனவே, திருடிய சிலைகளைத் மீண்டும் கோவிலில் ஒப்படைக்க முடிவு செய்தோம்' எனத் திருடர்கள் எழுதியிருந்தனர். கோவிலில் காணாமல் போன சிலைகள் தனது வீட்டின் அருகே கிடைத்துள்ளதை போலீசாருக்கு அர்ச்சகர் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், மீதமுள்ள 2 சிலைகளின் நிலை என்ன என்பது தொடர்பாக தகவல் இல்லை. இதனால் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். சிலைகளை திருடியவர்களே, திருடியதற்காக தங்களுக்கு பயங்கரமான கனவுகள் வருவதாக பயந்து சிலைகளை வைத்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE