வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நிலக்கரி மோசடி தொடர்பாக, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினால் பொறுத்து கொள்ள மாட்டோம் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, கட்சியின் தேசிய பொது செயலாளராகவும், எம்.பி.,யாகவும் உள்ளார். மாநிலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ., 2020 ல் வழக்குப்பதிவு செய்தது. அதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருசிரா பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.இதனிடையே, அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்திலும் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதேநேரத்தில், தனது வீட்டில் விசாரணை நடத்த வேண்டும். டில்லியில் விசாரணை வேண்டாம் என அபிஷேக் பானர்ஜி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனிடையே, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யுயு லலித் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: நிலக்கரி மோசடி தொடர்பாக அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்தலாம். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு மேற்கு வங்க அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அந்த அமைப்பின் அதிகாரிகள் விசாரணைக்கு வரும்போது பாதுகாப்பு வழங்க வேண்டும். கோல்கட்டாவில், விசாரணைக்கு நடத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர், அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்கத்துறை தகவல் தெரிவிக்க வேண்டும். விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. விசாரணைக்கு எந்த இடையூறும் ஏற்படுத்துவதை நீதிமன்றம் பொறுத்து கொள்ளாது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE