வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு : உடல் எடையை குறைக்க செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, 'கன்னட டிவி' சீரியல் நடிகை மரணம்அடைந்தார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் சேத்தனா ராஜ், 22. இவர், 'கீதா, தொரசானி, ஒலவின நில்தானா' போன்ற, 'டிவி' நாடகங்களிலும்; ஹவயாமி என்ற கன்னட சினிமாவிலும் நடித்துள்ளார். பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று உடல் கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அன்று மாலையில், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.
சிகிச்சை செய்த மருத்துவமனையில் ஐ.சி.யு., இல்லாததால், மஞ்சுநாத் நகரிலுள்ள வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சேத்தனா ராஜ் தந்தை கோவிந்தராஜ் கூறியதாவது: கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக, என் மகள் எங்களிடம் கூறினார். நாங்கள் சம்மதிக்கவில்லை. எங்களுக்கு தெரியாமலேயே, தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். நாங்கள் அங்கு செல்வதற்குள் சிகிச்சையை ஆரம்பித்து விட்டனர்.
மருத்துவமனையின் கவனக்குறைவாலும், போதுமான உபகரணங்களின்றி அறுவை சிகிச்சை செய்ததாலும், என் மகள் உயிரிழந்தார். என் மகள் தைரியமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தார். மருத்துவமனை நிர்வாகத்தின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு, அவர் கூறினார். சேத்தனா இறப்புக்கு காரணமான மருத்துவமனை மீது, அவரின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், 'சேத்தனாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். அவருக்கு நாடி துடிப்பு இல்லாததால், சிகிச்சைகள் மேற்கொண்டும், அவரை காப்பாற்ற முடியவில்லை' என்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, இறப்புக்கு உண்மையான காரணம் தெரியவரும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE