புதுடில்லி : மிக அதிவேக இணைய சேவையை வழங்கும் வகையில், '5ஜி ஸ்பெக்ட்ரம்' தொழில்நுட்பத்தை அறிமுகம்செய்வதற்கான முயற்சிகள் நடந்து வரும் நிலையில், ''அடுத்த 8 ஆண்டுகளுக்குள், '6ஜி' சேவையை வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் சேவைகளை வேகப்படுத்தும் வகையில், 4ஜி சேவை, உலக அளவில், 2009ம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டது. நம் நாட்டில் முதன் முதலாக, 2012ல் அறிமுகமானது. ஆனால், மக்களிடையே அது பெரிய அளவில் சென்று சேர்ந்தது, 2016ம் ஆண்டு தான்.
இந்நிலையில், 5ஜி தொழில்நுட்பத்துக்கு சில நாடுகள் ஏற்கனவே மாறியுள்ளன. நம் நாட்டில், இந்தாண்டுக்குள் அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், 'டிராய்' எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின், 25ம் ஆண்டு விழா, டில்லி யில் நேற்று நடந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அறிமுகமானது. ஆனால், அது செயல்பாட்டில் குழப்பம், ஊழலுக்கு அடையாளமாக மாறிவிட்டது.அதே நேரத்தில், 2014ல், பா.ஜ., ஆட்சி அமைந்த பின், மிகவும் வெளிப்படையாக, 4ஜி தொழில்நுட்பத்துக்கு நாம் மாறினோம்.
தற்போது, 5ஜி தொழில்நுட்பத்துக்கு செல்ல உள்ளோம். டிராய் அமைப்புக்கு, இதில் மிகப் பெரும் பங்கு உள்ளது.இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்துவது என்பது, வெறும் தகவல்களை மிக விரைவாக பெறுவது என்பது மட்டுமல்ல. அடுத்த சில மாதங்களுக்குள், 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய, நாம் தயாராகி வருகிறோம்.
இது அறிமுகம் செய்யப்படும் போது, நம் நாட்டின் பொருளாதாரம், மேலும், 34.86 லட்சம் கோடி ரூபாய் உயரும்.இன்டர்நெட் வேகம் அதிகரிப்பதால், நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும்; புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இதன் மூலம், நாட்டின் அரசு நிர்வாகம் மேம்படும்; மக்கள் வாழ்க்கைத் தரம் உயரும்; தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் சுலபமாகும்.வேளாண்மை, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு என, பல்வேறு துறைகளுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும்.
தற்போது, நாம், 5ஜி தொழில்நுட்பத்துக்கு செல்ல உள்ளோம்.அதே நேரத்தில், அது போதாது. அடுத்த எட்டு ஆண்டுகளுக்குள், நம் நாட்டில், 6 ஜி தொழில்நுட்பத்தை நாம் அறிமுகம் செய்ய வேண்டும். இதற்கான பணிக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.
5ஜி தொழில்நுட்பத்தை, நம் நாட்டின் தேவைக்கு ஏற்ப, உள்நாட்டிலேயே உருவாக்குவதற்காக, '5ஜி டெஸ்ட் பெட்' எனப்படும் பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மையம் தலைமையில், எட்டு அமைப்புகள் இணைந்து இதை உருவாக்கியுள்ளன.டில்லி, ஹைதராபாத், பாம்பே, கான்பூர் ஐ.ஐ.டி.,களுடன், பெங்களூரு இந்திய அறிவியல் மையமும் இதில் இடம்பெற்றுள்ளது.நேற்று நடந்த நிகழ்ச்சியில், இதை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். கடந்த 2018ல், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மொத்தம், 220 கோடி ரூபாய் செலவில், இந்த பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட, நாட்டில் ஐந்து இடங்களில் இதுபோன்ற பரிசோதனை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.இந்த பரிசோதனை மையங்கள் மூலம், இந்திய 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினர், 5ஜி தொழில்நுட்பத்துக்கு உட்பட்டு, தங்கள் பொருட்களின் செயல்பாடுகளை பரிசோதனை செய்ய முடியும். இதன் மூலம் வெளிநாடுகளை சார்ந்திராமல், உள்நாட்டிலேயே 5ஜி தொழில்நுட்பம் உருவாக்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE