புதுடில்லி : தாஜ்மஹாலில் பூட்டப்பட்டிருக்கும் இரண்டு அறைகளின் புகைப்படங்களை, இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஆக்ராவில், உலக புகழ் பெற்ற தாஜ்மஹால் உள்ளது.

உ.பி., மாநில பா.ஜ., ஊடகப் பிரிவு பொறுப்பாளராக இருக்கும் ரஜ்னீஷ் சிங், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'தாஜ்மஹாலில், 22 அறைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. அங்கு, ஹிந்து கடவுள் சிலைகள் இருப்பதாக, வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
'அந்த அறைகளை திறந்து ஆய்வு செய்ய, தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.இந்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், தாஜ்மஹாலில் பூட்டப்பட்டிருக்கும் இரண்டு அறைகளின் புகைப்படத்தை, இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அந்த அறைகளின் புகைப்படங்களை தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது.

அறைகளில், சிதைந்து போன சுண்ணாம்பு பூச்சு நீக்கப்பட்டு, பாரம்பரிய முறையில் புதிதாக சுண்ணாம்பு பூசப்பட்டதாக, தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.''தொல்லியல் துறை இணையதளத்தைப் பார்வையிட்டால், தாஜ்மஹாலில் பூமிக்கடியில் உள்ள அறைகளின் புகைப்படங்களை பார்க்கலாம்,'' என, தொல்லியல் துறை ஆக்ரா பிரிவின் தலைவர் ஆர்.கே.படேல் தெரிவித்து உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE