அவிநாசி:திருமுருகன்பூண்டி, நகராட்சியாக தரம் உயர்ந்துள்ளதால், துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.திருமுருகன்பூண்டி நகராட்சியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, எட்டு நிரந்தர மற்றும் 123 தற்காலிக துாய்மை பணியாளர்கள், குழுக்கள் மூலம் பணிபுரிகின்றனர். பெரும்பாலான துாய்மை பணியாளர்கள், 15 ஆண்டு களுக்கும் மேல், தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சுகாதாரம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள, பொது சுகாதாரப்பிரிவு பிரத்யேகமாக உருவாக்கப்பட வேண்டும். இதனால், துாய்மைப்பணி மேற்கொள்ள, 250 வீடுகளுக்கு, ஒரு துாய்மை பணியாளர் நியமிக்கப்படுவர்.ஒரு கி.மீ., துார ரோட்டுக்கு ஒரு பணி யாளர் வீதம் நியமிக்கப்பட்டு, சாக்கடை மற்றும் சாலை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படும். 20 துாய்மை பணியாளர்களை கண்காணிக்க, ஒரு துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடம் தோற்றுவிக்கப்படும்.
குப்பைகளை தரம் பிரிக்கும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக மேற்கொள்ளப்படும். 300 வீடுகளுக்கு ஒரு கொசு ஒழிப்பு பணியாளர் நியமிக்கப்படுவர். இந்த பிரிவு, சுகாதார அலுவலர் மேற்பார்வையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடம் கூட, நிரப்பப்படவில்லை. இந்நிலையில், நகராட்சியில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு துாய்மை பணியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.