வாரியாரிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்தது யார்?: ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கைக்கு பா.ஜ., பதிலடி| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

'வாரியாரிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழுந்தது யார்?': ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கைக்கு பா.ஜ., பதிலடி

Updated : மே 18, 2022 | Added : மே 17, 2022 | கருத்துகள் (18) | |
'முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை பற்றி, ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் தவறாக பேசினார். அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? அவர் வெளியில் எங்குமே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. 'அதே போன்ற நிலை தான், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும் ஏற்படும்' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்திருப்பது, பா.ஜ.,வில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க.,வின்
BJP,Annamalai, RS Bharathi, Bharatiya Janata Party

'முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை பற்றி, ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் தவறாக பேசினார். அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? அவர் வெளியில் எங்குமே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. 'அதே போன்ற நிலை தான், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும் ஏற்படும்' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்திருப்பது, பா.ஜ.,வில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.,வின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது. அதில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

இது குறித்து, தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது: ஆர்.எஸ்.பாரதி, தான் வகிக்கும் பொறுப்பை உணர்ந்து, எப்போதும் பேசுவதே கிடையாது. தான் ஒரு சண்டியர் என்பது போலவே பேசுகிறார். அவரது வாய்த் துடுக்கு பேச்சு, மிகப் பெரிய சங்கடத்தை ஏற்படுத்திய பின்பும், அவர் திருந்தவில்லை.

இப்படித் தான், தி.மு.க., இளைஞர் அணி கூட்டத்தில், 'இன்று தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக இருக்கின்றனர் என்றால், அது தி.மு.க., போட்ட பிச்சை' என, பேசினார். அந்த விவகாரம் தொடர்பாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, அவர் பட்டபாட்டை நாடு ரசித்து பார்த்தது. அதை அவர் மறந்து விட்டு, மீண்டும் பேச துவங்கியுள்ளார்.

தொடர்ந்து ஹிந்து மதத்தை விமர்சித்து வந்த அண்ணாதுரைக்கு புற்று நோய் வந்து, சிகிச்சைக்காக வெளிநாட்டு மருத்துவர் மில்லரை தேடி சென்றார். அப்போது, கிருபானந்த வாரியார், 'எத்தனை மில்லரை தேடி போனாலும், அது கில்லரில் தான் போய் முடியும்' என, சாபம் விட்டார். உடனே, நெய்வேலியில் தங்கி இருந்த கிருபானந்த வாரியாரை, தி.மு.க.,வினர் வீடு புகுந்து தாக்கினர். 'தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் நாசமாகப் போவர்' என, வாரியார் சாபம் விட்டார்.

சாபம் பலித்து, பலரும் துன்பப்பட்டனர். அதிலிருந்து விடுபட வாரியாரை தேடி வந்து, அவரது காலில் விழுந்து சாப விமோசனம் பெற்று சென்றனர். இதுதான் நடந்த வரலாறு. நடந்ததில் பாதியை மட்டும் மேலோட்டமாக கூறி, அண்ணாமலையை மிரட்டி பார்க்கிறார் பாரதி. இந்த பூச்சாண்டிக்கு அஞ்சுபவரா அண்ணாமலை?

கிருபானந்த வாரியார் காலத்தில் இருந்த தி.மு.க.,வும் இப்போது இல்லை. மிதவாதிகள் இருந்த பா.ஜ.,வும் இப்போது இல்லை. கண்ணுக்கு கண்; பல்லுக்குப் பல் என்பது எங்களுக்கும் தெரியும். வன்முறையாளர்களை, சட்டத்துக்கு புறம்பானவர்களை துப்பாக்கியால் அடக்கி ஆண்ட போலீஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை தான், இப்போது தமிழக பா.ஜ.,வுக்கு தலைவர் என்பதை ஆர்.எஸ்.பாரதி மனதில் கொள்ள வேண்டும். பழைய நினைப்பிலேயே வீர வசனம் பேசினால், பதிலடியாக பா.ஜ., வீர வசனம் பேசாது. கொடுக்கும் பதிலடியை எதிர்கொள்ளும் தெம்பும், திராணியும் ஆர்.எஸ்.பாரதிக்கும், அவரது கட்சிக்கும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் --

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X