கோவை வேளாண் பல்கலை மற்றும் வனக்கல்லுாரியிலுள்ள நிலங்களில், தலா ஆறு மீட்டர் அளவுக்கு இடம் கேட்டும் கிடைக்காததால், லாலி ரோடு சந்திப்பில் பாலத்தை வடிவமைக்க முடியாமல் காத்திருக்கிறது, மாநில நெடுஞ்சாலைத்துறை.நகருக்குள் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில அரசின் நிதியில் பாலங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள லாலி ரோட்டில் பாலம் கட்டுவது, பல ஆண்டுகளாக வெறும் கனவாகவே இருந்து வருகிறது.
![]()
|
இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, பல ஆயிரம் மக்கள் பெரும்பாடு படுகின்றனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, நகரில் பல பாலங்கள் கட்டப்பட்டபோதும், அங்கு பாலம் கட்ட எந்த முயற்சியும் நடக்கவில்லை.பல முறை திட்டமிடப்பட்டும், அளவீடுகள் எடுக்கப்பட்டும் இப்போது வரையிலும் இதற்கான திட்ட அறிக்கை கூட தயாராகவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னும் பலனில்லை.
இதுதான் காரணம்
நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், இந்த பாலம் தொடர்பான அறிவிப்பு வருமென்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வரவில்லை. இதற்கான காரணம், தற்போது தெரியவந்துள்ளது.இப்போது ரோடுள்ள இடத்திற்குள் பாலத்தைக் கட்டுவதாக இருந்தால், பாலம் மிகவும் குறுகலாக இருக்கும்; அத்துடன், சர்வீஸ் ரோடு அமைக்கவும் இடமிருக்காது என்பதால், கூடுதல் இடம் கிடைத்தவுடன் பாலத்தை வடிவமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டிருப்பதே, இதற்குக் காரணமெனத் தெரிய வந்துள்ளது. இதற்காக, வேளாண் பல்கலை மற்றும் வனக்கல்லுாரியிடமிருந்து நிலத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் இத்துறை இறங்கியுள்ளது.
வழங்குமா பல்கலை
தடாகம் ரோட்டிலிருந்து மருதமலை செல்லும் ரோட்டில், வலது புறமுள்ள வேளாண் பல்கலை நிலத்திலும், கவுலி பிரவுன் ரோட்டில் உள்ள வனக்கல்லுாரி நிலத்திலும் தலா ஆறு மீட்டர் அளவுக்கு நிலத்தை கையகப்படுத்தித் தரவேண்டுமென்று, மாவட்ட நிர்வாகத்துக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. அந்த நிலத்தை எடுத்துத் தந்த பின்பு, மொத்த இடத்தையும் வைத்தே, புதிய பாலம் மற்றும் சர்வீஸ் ரோடுகளைத் திட்டமிட முடிவு செய்திருப்பதாக, துறையின் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோன்று, லாலி ரோடு சந்திப்பு மற்றும் கவுலி பிரவுன் ரோடு-மேட்டுப்பாளையம் ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில், வளைவுப் பகுதிகளை விரிவாக்கம் செய்து, இடது புறம் செல்லும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதற்கும் கூடுதல் இடம் தேவைப்படுகிறது.
மனசு வைக்கணும்
இதற்கான இடங்களை, இவ்விரு நிர்வாகங்களிடம் பேசி, கையகப்படுத்தித்தர வேண்டிய பொறுப்பு, கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு உள்ளது. ஆனால் கலெக்டர் மற்றும் அதிகாரிகள், கோவை மக்கள் பிரதிநிதிகள் யாருமே இதைப் பற்றிக் கவலைப்படுவதாகவோ, முயற்சி எடுப்பதாகவோ தெரியவில்லை. இதற்கேற்ப, 600 ஏக்கர் பரப்பளவிலுள்ள வேளாண் பல்கலையிலும், 100 ஏக்கர் பரப்பிலுள்ள வனக்கல்லுாரியிலும் ரோடு விரிவாக்கம் மற்றும் பாலம் கட்டுவதற்குத் தேவைப்படும் நிலத்தைத் தருவதற்கு, இவ்விரு நிர்வாகங்களும் மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று கோவை வரும் தமிழக முதல்வர், மக்களின் நலனுக்காக இவ்விஷயத்தில் தக்க முடிவு எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
![]()
|
வேளாண் பல்கலையின் நுாற்றாண்டு கட்டடம், 2008ல் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதாக அப்போது சர்ச்சை எழுந்தது. அதன்பின் உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்த ஆண்டில், பதிவாளர் சார்பில், திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டது.அதைத் திருப்பி அனுப்பிய குழுமம், தெலுங்கு பாளையம் விரிவு அபிவிருத்தித் திட்டம் 2ல் உள்ளபடி, மருதமலை ரோட்டை 100 அடி ரோடாக விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான நிலத்தை ஒப்படைப்பு செய்வதற்கான ஒப்புதலுடன் திருத்தப்பட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியது. ஆனால் இன்று வரை நிலமும் ஒப்படைக்கப்படவில்லை; ஐந்து நோட்டீஸ் கொடுத்தும், மறு விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை. இன்று வரை அந்தக் கட்டடத்துக்கு முறையான திட்ட அனுமதியும் பெறப்படவில்லை.
-நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE