தளவாய்புரம் : விருதுநகர் மாவட்டம் சேத்துாரில் மணல் பதுக்கல் பிரச்னையில் இந்திய கம்யூ., நகர செயலாளர் ராஜா மீது வழக்கு பதிவு செய்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள 183 யூனிட் மணல் பறிமுதல் செய்ததில் தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனுக்கு தொடர்பிருப்பதாக கூறி தி.மு.க., வின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏப்.,30ல் வருவாய் துறையினர் சோதனை செய்ததில் சேத்துார் இந்திய கம்யூ., நகர செயலாளர் ராஜா விற்கு சொந்தமான இடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்த ரூ.18 லட்சம் மதிப்பிலான 183 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டது.இந்த விவகாரத்தில் தி.மு.க.,வினர் தலையீட்டின் பேரில் இந்திய கம்யூ., நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்த வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூ., கட்சியினர் சேத்துார் பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்பாட்டம் செய்தனர்.
இதில் பங்கேற்ற இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் லிங்கம் பேசுகையில்,'' ராஜாவுக்கு சொந்தமான இடத்தை சீல் வைத்த விவகாரத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியனுக்கு நேரடியாக தொடர்பு உள்ளது. அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனுக்கு மறைமுகமாக தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கிறோம்.
இங்கு நடக்கும் மணல் திருட்டில் எம்.எல்.ஏ.,வுக்கு முக்கிய பங்கு உள்ளது. கூட்டணி கட்சி நிர்வாகிக்கு நடந்த அவலத்தை, எம்.எல்.ஏ., இதுவரை கேட்கவில்லை. இச்செயல் பா.ஜ., வளர்ச்சிக்கு துணை புரியும்,என்றார்.இதுகுறித்து எம்.எல்.ஏ., தங்கபாண்டியன்: அரசு அதிகாரி கைப்பற்றிய மணல் குறித்து விளக்கம் தராமல் என் மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE