விருதுநகர்:"விதிகளை மதித்து விபத்தில்லா மாவட்டம் உருவாக்குவோம்," என விருதுநகரில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுறுத்தினார்.
விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லுாரியில் அரசு போக்குவரத்து துறை சார்பில் கல்லுாரி வாகன டிரைவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.இதில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவர்களை பாராட்டி நினைவு பரிசுகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கி பேசியதாவது:
டிரைவர்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். இதற்காக 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளை தவிர்க்க உதவ வேண்டும். சாலை விதிகளை மதித்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க வேண்டும், என்றார்.
துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாஸ்கரன், இளங்கோ, குமாரவேல், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வராஜ், கார்த்திகேயன், பாத்திமா பர்வின் பங்கேற்றனர். 400க்கும் மேற்பட்ட கல்லுாரி டிரைவர்கள் கலந்து கொண்டனர்.