கடலுார் : கடலுார் மகளிர் கல்லுாரி கழிப்பறையில் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.கடலுார், செம்மண்டலத்தில், கந்தசாமி நாயுடு மகளிர் கலைக்கல்லுாரி உள்ளது. பச்சையப்பா டிரஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள இக்கல்லுாரியில், விழுப்புரம் மாவட்டம், சின்னபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் மகள் தனலட்சுமி, 19; மாலை நேர வகுப்பில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார்.
அதே பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, கல்லுாரி சென்று வந்தார். நேற்று மாலை நேர வகுப்புக்கு வர வேண்டிய அவர், அதிகாலை 7:30 மணிக்கே கல்லுாரிக்கு வந்துள்ளார்.கல்லுாரி பின்புறம் உள்ள கழிப்பறைக்கு சென்று, துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லுாரி ஊழியர் ஒருவர் கழிப்பறைக்கு சென்றபோது, தனலட்சுமி பிணமாக தொங்கியதை பார்த்து தகவல் தெரிவித்தார். கடலுார் போலீசார், கல்லுாரியில் விசாரணை நடத்தினர்.தனலட்சுமியை சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை மாலை அவரது தந்தை, நாகலிங்கம் கல்லுாரி விடுதியில் விட்டு சென்றதாக அவருடன் தங்கியிருந்த மாணவியர் தெரிவித்தனர்.
தனலட்சுமியின் புத்தக பையை சோதனை செய்ததில், அண்ணனுக்கு எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், 'தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, எழுதியுள்ளார்.கடிதத்தை கைப்பற்றிய போலீசார், வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே தனலட்சுமியின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் நேற்று கல்லுாரி முதல்வரின் அறைக்கு சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினர்.
தனலட்சுமி, தன் சகோதரர் சக்திக்கு எழுதிய உருக்கமான கடிதம்:நல்லா படிடா சக்தி. அம்மா, அப்பாவை பாத்துக்கோ. சீக்கிரமா வீடு கட்டிருங்க. இது போலியான உலகம் யாரையும் நம்பாதே. என்னுடைய வாட்சை நிஷாந்திக்கு கொடுத்துவிடு. என் அக்கவுன்டில் 6,000 ரூபாய் பணம் இருக்கு. அதை எடுத்து வாட்ச் வாங்கிக்கோ. தேர்வில் நான் பெயில் ஆகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. இதனால் நான் உலகத்தை விட்டுப் போகிறேன். நான் இறந்துவிட்டால் என்னுடைய என்.சி.சி., உடையை போட்டு விடுங்க. லவ் யு அம்மா, அப்பா.இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE