பெங்களூரு:கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடைக்கான அவசர சட்டத்துக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று ஒப்புதல் வழங்கினார்.
இதன் வாயிலாக கட்டாய மதமாற்ற தடை சட்டம் கர்நாடகாவில் உடனடியாக அமலுக்கு வந்தது.கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது.கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா 2021 டிசம்பர் 21ல் கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கிடையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆனால் சட்ட மேலவையில் போதுமான பலம் இல்லாததாலும் எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியாலும் நிறைவேற்றப்படவில்லை.இதனால் அவசர சட்டம் கொண்டு வர கர்நாடக அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இதன்படி புதிய சட்ட வரைவு தயாரித்து கர்நாடக கவர்னருக்கு அரசு அனுப்பி வைத்தது.அதை பரிசீலித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் சட்ட வரைவுக்கு நேற்று ஒப்புதல் வழங்கினார்.
இதன் வாயிலாக கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. புதிய சட்டப்படி 'மதம் மாறுவதற்கு பணம்பரிசு பொருட்கள் வழங்குவதாகவோ; இலவச கல்வி திருமணம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவோ ஆசை வார்த்தை கூறுவது குற்றம்.
வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாகவும் உணர்வுப் பூர்வமான விஷயங்களை வைத்தும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்வதும் சட்டப்படி குற்றம்.'அவ்வாறு செய்வோருக்கு குறைந்தபட்சம் மூன்று முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்' என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE