வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: 'டாஸ்மாக்' பார் வசூல், உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம் மற்றும் கட்சி பதவி குறித்து, தி.மு.க.,வை சேர்ந்த இரு நிர்வாகிகள் போனில் பேசிய உரையாடல், 'வைரல்' ஆகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. தி.மு.க., செயலாளரான இவர், பேரூராட்சியின் துணை தலைவராகவும் உள்ளனர். இவரது மனைவி தமிழ்செல்வி, 15வது வார்டு கவுன்சிலர்.துணைத் தலைவர் துரைசாமி, தாராபுரத்தை சேர்ந்த தி.மு.க., மாணவரணி ஒன்றிய அமைப்பு செயலாளர் ஆதித்யா ஆகியோர் பேசிக்கொள்ளும் ஆடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
ஆடியோவில் இடம்பெற்ற உரையாடலில் சில...
‛‛பேரூராட்சி துணைத் தலைவர் நீங்க, உங்க சம்சாரம் கவுன்சிலராக ஆக்கிட்டீங்க. டி.என்.எஸ்.டி.சி., சங்க தலைவர் நீங்க. கட்சியில் பேரூராட்சி செயலாளர், பாசன சங்க ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஆகிருக்கீங்க. நான், நுாறு ஏக்கர் வச்சுருக்கன், என்னைய நீ கேட்டீயா. ஏய் மீசை தொரை, உன்னை என்ன பண்றன்னு பாரு.கூட்டுறவு சங்கத்துக்குள் வந்தா உன்ன வுடமாட்டேன். எல்லா பதவியையும் நீயே வச்சுக்குவ. இனி, செயலாளர் பதவி கிடையாது. இப்ப ஒன்றிய பதவியை கேட்டயாமா.

சாமிநாதன் மினிஸ்டர் கிட்ட கேட்டு இருக்க, எனக்கு தெரியும். இனிமேல், உன்னை தலை துாக்க விடமாட்டேன். 'டாஸ்மாக்' பாருக்கு 'டிடி' வாங்குறதுக்கு நீ யாரு. ஆறு மாசமா, கவர்மென்ட்ல வாங்கி சாப்டற. நீ தலைவனாக ஆகுறதுக்கும், உன் சம்சாரம் கவுன்சிலராக ஆகுறதுக்கும் கட்சி வேலை செய்யணுமா...?'' இவ்வாறு, பேசும் ஆதித்யா, திடீரென பல இடங்களில், காது கூசும் அளவுக்கு தகாத வார்த்தைகளை பேசியுள்ளார். இதை கேட்டு கொண்டிருக்கும் துரைசாமி, ஒன்றிரண்டு வார்த்தை மட்டுமே பேசினார்.
இந்த வில்லங்கமான ஆடியோ வெளியானது குறித்து, துரைசாமியிடம் கேட்டதற்கு, ''மாணவர் அமைப்பில் இருக்கும் அவர், கட்சியிலுள்ள பிரச்னை குறித்து, போதையில் பேசி விட்டார். நான் வயதானவன். இந்த பிரச்னையை, அமைச்சர் சாமிநாதன் கவனத்துக்கு கொண்டு செல்வேன்,'' என்றார். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஆதித்யாவை தொடர்பு கொண்டபோது, அவரது மொபைல் போன், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE