சிதம்பரம்: சிதம்பரத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் அறை பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம் புவனகிரி அருகில் உள்ள சேந்திரகிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 28; ஆயுதப்படை போலீஸ். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுதேர்வு நடைபெறுவதால், சிதம்பரம் பகுதியில் தேர்வு எழுதிய விடைத்தாள்கள், சிதம்பரம் தில்லை நகரில் உள்ள வீனஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் அறைக்கு 24 மணி நேரரும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். விடைத்தாள் அறை பாதுகாப்பு பணியில் பெரியசாமி மற்றும் ராஜ்குமார் நேற்று (மே 17) இரவு பணியில் இருந்தனர்.

இருவரும் நள்ளிரவு தூங்கியுள்ளனர். அப்போது, அறை அருகில் உள்ள இருக்கைக்கு வந்த பெரியசாமி, பாதுகாப்பிற்கு கொண்டு வந்த துப்பாக்கியால் தன் கழுத்தில் வைத்து சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலே பெரியசாமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். உடன் பணியாற்றிய ராஜ்குமார் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெரியசாமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பணி சுமையா, அல்லது குடும்ப பிரச்னை காரணத்தால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரத்தில் விடைத்தாள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.