புதுக்கோட்டை : ''ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், மோசடி நடந்திருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் சாமுவேல் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில், 2016 முதல் 2020ம் ஆண்டு வரை, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில், 545 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில், 435 வீடுகள் கட்டாமலேயே, பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பதாக புகார் எழுந்தது.இது குறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தணிக்கை செய்த போது, ஏழு கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதை கண்டுபிடித்தனர்.அதனால், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் பணியாற்றும் ஒன்றிய ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என, 25 பேரிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கினார்.
ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் சாமுவேல் தலைமையிலான குழு, நேற்று ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்டது. இது குறித்து, கூடுதல் இயக்குனர் சாமுவேல்,''ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.