இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: டீக்கடையில் பொதுத்தேர்வுக்கு 'பிட்': அதிகாரிகள் ஆய்வில் 'திடுக்'

Updated : மே 18, 2022 | Added : மே 18, 2022 | |
Advertisement
தமிழக நிகழ்வுகள்:டீக்கடையில் பொதுத்தேர்வுக்கு 'பிட்': நாமக்கல் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வில் 'திடுக்'நாமக்கல் : கொல்லிமலை அருகே டீக்கடையில், பிளஸ் 2 மாணவர்கள் 'காப்பி' அடிக்க வசதியாக வைத்திருந்த 'ஜெராக்ஸ் பிட்' பேப்பர்களை, தேர்வுத்துறை இணை இயக்குனர் பறிமுதல் செய்தார்.மேலும், அரசு பள்ளியில், தேர்வில் பிட் அடிப்பதற்காக வைத்திருந்த, சிறிய
crime report, education, murder, robbery, sucide, theft, sucide,


தமிழக நிகழ்வுகள்:
டீக்கடையில் பொதுத்தேர்வுக்கு 'பிட்': நாமக்கல் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வில் 'திடுக்'


நாமக்கல் : கொல்லிமலை அருகே டீக்கடையில், பிளஸ் 2 மாணவர்கள் 'காப்பி' அடிக்க வசதியாக வைத்திருந்த 'ஜெராக்ஸ் பிட்' பேப்பர்களை, தேர்வுத்துறை இணை இயக்குனர் பறிமுதல் செய்தார்.மேலும், அரசு பள்ளியில், தேர்வில் பிட் அடிப்பதற்காக வைத்திருந்த, சிறிய எழுத்து அளவிலான, 'மைக்ரோ' ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை, மாணவர்களே ஒப்படைத்தனர்.

தமிழகம் முழுதும், பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இத்தேர்வுக்காக, நாமக்கல் மாவட்ட பொறுப்பாளராக, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரசு பொதுத்தேர்வு நடக்கும் மையங்களில் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம், பிளஸ் 1 வகுப்புக்கு வேதியியல், உயிரியியல், தாவரவியல் தேர்வுகள் நடந்தன.இணை இயக்குனர் பொன்குமார், கொல்லிமலையில் வாழவந்திநாடு ஜி.டி.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு பணி மேற்கொள்ள சென்றார்.அப்போது, சோளக்காடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடைகளில், மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தார். காரை தள்ளி நிறுத்திவிட்டு டீக்கடைக்கு சென்றார் .உள்ளே சென்று பார்த்தபோது, ஜெராக்ஸ் இயந்திரத்தில், தேர்வில் பிட் அடிப்பதற்காக, சிறிய எழுத்துகளில், மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் நகல் எடுக்கப்பட்டு இருந்ததை பார்த்து திடுக்கிட்டார். உடனடியாக அவற்றை கைப்பற்றிய இணை இயக்குனர், கடை உரிமையாளரை எச்சரித்தார். மாணவர்கள் அங்கிருந்து நழுவினர்.
நேற்று, பிளஸ் 2 மாணவர்களுக்கான கணித தேர்வு நடந்தது. அப்போது, கொல்லிமலை ஜி.டி.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9:30 மணிக்கு தேர்வு துவங்கியது. மாணவர்களிடம், 'யாராவது பிட் பேப்பர் வைத்திருந்தால் கொடுத்து விடுங்கள்' என, தேர்வு மைய பொறுப்பாளர் அறிவுறுத்தினார். இதையடுத்து, தாங்கள் வைத்திருந்த ஏராளமான பிட் பேப்பர்களை மாணவர்கள் அவரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளிலும், மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் கைப்பற்றப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், பல பகுதியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பிட் அடிக்க வசதியாக, முக்கிய வினாக்களுக்கான விடைகளை பிட் பேப்பர்களாக தயார் செய்து, ஜெராக்ஸ் கடைகளில் விற்பனை செய்துள்ளனர்.இது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மருமகள், பேரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமனார் கைதுகம்பம் : தேனி மாவட்டம், கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் வரதட்சணை கொடுமையால் மருமகள் சுகப்பிரியா 22, பேரன் யோகேஷ் 2, மீது பெட்ரோல் ஊற்றி மாமனார் பெரியகருப்பன் தீ வைத்ததில் யோகேஷ் இறந்தார். பலத்த காயங்களுடன் சுகப்பிரியா தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரியகருப்பனை போலீசார் கைது செய்தனர்.


latest tamil newsநாராயணன்தேவன்பட்டயை சேர்ந்த பெரியகருப்பன், ஒச்சம்மாள் தம்பதியின் மகன் அருண்பாண்டி 23. இவர் திராட்சை தோட்ட வேலைக்கு செல்பவர். இதே ஊரை சேர்ந்த சுகப்ரியாவை காதலித்து திருமணம் செய்தார். சுகப்பிரியா இல்லம்தேடி மருத்துவம் திட்டத்தில் சில நாட்கள் நர்ஸ்ஆக பணி செய்தார். இவர்களது மகன் யோகேஷ். சுகப்ரியாவிடம் வரதட்சனை கேட்டு மாமனார் அடிக்கடி சண்டையிட்டார். நேற்று முன்தினம் இரவு வரதட்சணை சம்மந்தமாக மருமகள், மாமனார் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பெரியகருப்பன், சுகப்பிரியா, யோகேஷ் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயில் எரிந்து கொண்டிருந்த இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.
ஆனால் யோகேஷ் இறந்தார். பலத்த தீக்காயங்களுடன் சுகப்ரியா தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.தேனி மாஜிஸ்திரேட்டிடம் சுகப்ரியா அளித்த வாக்குமூலத்தில்," என்னை வரதட்சனை வாங்கி வரும்படி மாமனார் பெரியகருப்பன், மாமியார் ஒச்சம்மாள், நாத்தனார் கனிமொழி, கணவன் அருண்பாண்டி கொடுமைப்படுத்தினர்" என தெரிவித்துள்ளார். ராயப்பன்பட்டி போலீசார் நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்து, பெரியகருப்பனை கைது செய்தனர்.


ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் கைதுகுன்னுார் : நீலகிரி மாவட்டம், குன்னுாரைச் சேர்ந்தவர் நித்யா எவாலின், 38; மாநில நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர். இவரிடம், கோவையைச் சேர்ந்த செந்தில்முருகன், குன்னுார் பெட்டட்டியில், புதிதாக வாங்கிய இடத்தில் தடுப்பு சுவர் அமைக்க அனுமதி கோரி உள்ளார்.


latest tamil news


Advertisementஇதற்கு நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் நித்யா எவாலின், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்முருகன், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் தெரிவித்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, நித்யா எவாலினிடம், செந்தில் முருகன் பணம் வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், கையும் களவுமாக பிடித்தனர்.அவரை குன்னுார் நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.ரூ.25 கோடி மரகத லிங்கம் மீட்பு; கடத்த முயன்ற இரண்டு பேர் கைது


சென்னை : சென்னையில் இருந்து, வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு மரகத லிங்கங்களை போலீசார் மீட்டு, இருவரை கைது செய்துள்ளனர். சென்னை பூந்தமல்லி பகுதியில், மர்ம நபர்கள் மிகவும் தொன்மையான பச்சை நிற லிங்கத்தை பதுக்கி வைத்து, வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சித்து வருவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது.


latest tamil newsஇதையடுத்து, ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார், அந்த மர்ம நபர்கள் யார்? லிங்கத்தை பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை பூந்தமல்லி அருகே, வெள்ளவேடு, புது காலனியைச் சேர்ந்த பாலா, 46, சென்னை புதுச்சத்திரம், கூடப்பாக்கம் கலெக்டர் நகரைச் சேர்ந்த பாக்யராஜ், 42, ஆகியோர், லிங்கத்தை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.இதையடுத்து இவர்களிடம், சிலைகளை கடத்தும் வியாபாரிகள் போல போலீசார் அணுகினர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு போலீசாரை அலைக்கழித்தனர். போலீசாரும் மிகவும் திறமையாக செயல்பட்டு, இருவரையும் லிங்கத்துடன் பூந்தமல்லி அருகே வரவழைத்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் பிடித்தனர். இவர்களிடம் இருந்து, பச்சை நிற கல்லால் செய்யப்பட்ட மரகத லிங்கத்தை பறிமுதல் செய்தனர்.
லிங்கத்தின் பின் பகுதியில், பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட நாகாபரணம் இருந்தது. அதன் பின்புறத்தில் பறக்கும் நிலையில், இரு கைகளை உயர்த்திய வகையில், கருடாழ்வார் பொறிக்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு 25 கோடி ரூபாய். இது, 500 ஆண்டு கள் தொன்மை வாய்ந்தது. லிங்கத்தின் கீழ் பகுதியில், சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டு உள்ளன.
இந்த அம்சங்கள் யாவும், நேபாள பாணியில் உள்ளன. இதனால், அந்த நாட்டில் இருந்து, சென்னைக்கு கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு பின்னணியில் மேலும் மூன்று பேர் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது சிக்கியுள்ள நபர்கள், கடத்தல் சிலைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இந்த பச்சை நிற மரகலிங்கம் எப்படி கிடைத்தது என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.ராமஜெயம் கொலை வழக்குபோஸ்டர் ஒட்டியது போலீஸ்


latest tamil newsதிருப்பூர் : திருச்சியில், தமிழக அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில், துப்பு கொடுப்பவர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் 'போஸ்டர்' ஒட்டியுள்ளனர்.
திருச்சியைச் சேர்ந்த, அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், 52, கடந்த 2012 மார்ச் 29ல் படுகொலை செய்யப்பட்டார். இதில், தொடர்புடையவர்களை தமிழக போலீசார் மற்றும் சி.பி.ஐ.,யாலும் பிடிக்க முடியவில்லை.சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவில், சி.பி.ஐ., மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இடம் பெற்றுள்ளனர்.
அக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.தொடர்ச்சியாக, 'ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சரியான தகவல்களை துப்பு கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என, திருப்பூர் பகுதிகளில் போலீசார் விளம்பரம் செய்துள்ளனர். அதுபோல, நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுப் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை அணில்கள்


சென்னை : தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகையான பறக்கும் அணில்களை, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்; நோய் பரவும் அபாயத்தால், தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, 'தாய் ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று அதிகாலை, சென்னை விமான நிலையத்திற்கு வந்தது.


latest tamil newsஅதில் இருந்த பயணியரின் உடைமைகளை, சுங்கஅதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது, சந்தேகத்துக்கு இடமான பயணி ஒருவர் கொண்டு வந்த பிளாஸ்டிக் கூடைக்குள், ஒன்பது அணில் குட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.அவற்றை, மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப் பிரிவின், சென்னைஅதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவை, ஆப்ரிக்க கண்டத்தில் காட்டுப் பகுதியில் காணப்படும் அபூர்வ வகை பறக்கும் அணில்கள் என்பதும், சர்வதேச, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெறாமலும், மருத்துவ பரிசோதனையின்றியும் கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது.
இவற்றை நாட்டுக்குள் அனுமதித்தால் நோய் தொற்று பரவக்கூடும் என்பதால், மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் அறிவுரைப்படி, பயணியின் சொந்த செலவில், அவருடன் அணில்களும் நேற்றிரவு, தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.இதேபோல, நேற்று முன்தினம் கடத்தி வரப்பட்ட அரிய வகையான வெள்ளை முள்ளம் பன்றி, குரங்கு குட்டி ஆகியவை, தாய்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன.டேங்கர் லாரியில் கடத்தி வரப்பட்ட 20,000 லிட்டர் எரி சாராயம் பறிமுதல்

மதுராந்தகம் : பெங்களூரிலிருந்து டேங்கர் லாரியில் கடத்தி வரப்பட்ட 20 ஆயிரம் லிட்டர் எரி சாராயம், மதுராந்தகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு, கர்நாடகா பதிவு எண் உடைய டேங்கர் லாரியில், எரி சாராயம் கடத்தப்படுவதாக, மத்திய புலனாய்வுக் குழு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


latest tamil news


இதையறிந்த சேலம் மாவட்ட மத்திய புலனாய்வு குழு காவல் ஆய்வாளர் தென்னரசு, அந்த லாரியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.சேலத்தில் இருந்து ஆய்வாளர் தென்னரசு மற்றும் குழுவினர், கடைசியாக லாரி நிறுத்தப்படும் இடத்தை அறிவதற்காக, நான்கு நாட்களாக டேங்கர் லாரியை பின்தொடர்ந்து வந்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், பெங்களூரு சாலையில் வந்தபோது, போலீசார் பின்தொடர்வதை அறிந்த லாரி ஓட்டுனர், அவர்களிடம் பிடிபடாமல் இருக்க, சுங்குவார்சத்திரம் வழியாக லாரியை திருப்பினார்.
இதையடுத்து, ஆய்வாளர் தென்னரசு தகவலின்படி, சென்னை துணை காவல் கண்காணிப்பாளர் கந்தசாமி, சேலம் குழுவினருடன் இணைந்தார்.பின், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்- - வேடந்தாங்கல் செல்லும் சாலையில், பிரபல தனியார் நிறுவனம் எதிரில், முட்புதர்கள் நிறைந்த பகுதியில் டேங்கர் லாரியை நிறுத்தி, ஓட்டுனர் தப்பிச் சென்றார்.அங்கு வந்த மத்திய புலனாய்வு குழுவினர், லாரியை சோதனை செய்ததில் 20 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் இருந்தது. இதன் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என, அக்குழுவினர் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட லாரியின் வாகன பதிவு எண் வைத்து விசாரணை துவங்கி உள்ளது.செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், எரி சாராய லாரியை ஓட்டிச் சென்றனர்.


திருச்சி தொழில் மையமேலாளர் வீட்டில் 'ரெய்டு'


திருச்சி : திருச்சி மாவட்ட தொழில் மைய மேலாளர் மற்றும் பொறியாளர் வீடு, லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 160 சவரன் நகை, 1 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் சிக்கின.திருச்சி மாவட்ட தொழில் மையத்தில், தொழில்முனைவோர் கொடுக்கும் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க, அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.


latest tamil newsநேற்று முன்தினம் மாலை, டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில், திடீர் சோதனை நடத்தினர். இரண்டு மணி நேரம் நடந்த அதிரடி சோதனையில், தொழில் மைய மேலாளர் ரவீந்திரன் அறையில் இருந்தும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் கம்பன் ஆகியோரிடம் இருந்தும், கணக்கில் வராத 3 லட்சம் ரூபாயை, போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, திருச்சி, உறையூரில் உள்ள ரவீந்திரன் வீட்டிலும், திருவெறும்பூரில் உள்ள கம்பன் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.இதில், 15 லட்சம் ரூபாய் ரொக்கம், 160 சவரன் நகைகள், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஆவணங்கள் மற்றும் 1 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கின.கொடைரோடு அருகே பெட்ரோல் குண்டுவீச்சு, அரிவாள் வெட்டு: 4 பேர் காயம்கொடைரோடு : திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கந்தப்பகோட்டையில் வாகனத்தை ஓரமாக நிறுத்த கூறிய தகராறில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு அரிவாள் வெட்டு நடந்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil newsஇதில் 4 பேர் காயமடைந்த நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளபட்டியை சேர்ந்த ஆதித்யா, சத்திரியன் ஆகியோர் நேற்று முன்தினம் காலை வேனில் கந்தப்பகோட்டையில் மீன் விற்பனை செய்தனர். தெருவை மறித்து வேனை நிறுத்தியதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்பகுதியை சேர்ந்த சுரேஷ், மதன் வேனை ஓரமாக நிறுத்த கூறியபோது வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொண்டனர்.
அம்மையநாயக்கனுார் போலீசில் புகார் செய்ய சென்றபோது தி.மு.க., ஒன்றிய நிர்வாகி ஒருவர் பேசி தீர்த்துக் கொள்வதாக கூறியதால், போலீசார் புகாரை பெறவில்லை. இதன் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததால் அப்பகுதி கிருஷ்ணமூர்த்தி என்பவரது வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக போலீசில் புகார் செய்ய சென்றபோதும் அவர்கள் வழக்குப் பதியவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு சத்திரியன், ஆதித்யா ஆகியோர் 20க்கு மேற்பட்டவர்களோடு, கத்தி, பெட்ரோல் குண்டுகளுடன் கந்தப்பகோட்டை வடக்குத்தெருவில் நுழைந்தனர். அங்கிருந்த சுரேஷ் 23, விக்னேஷ் 21 , முத்துக்குமார் 22, ஆகியோரை அரிவாளால் வெட்டினர். மேலும் வெள்ளையம்மாள் தலையில் வெட்டியதோடு அவரது ஆட்டுக் குட்டியையும் வெட்டினர்.அப்போது துணியால் முகத்தை மூடியபடி சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். பெண்கள் கதறியபடி வீட்டிற்குள் சென்று கதவை பூட்டினர்.
ஆசைத்தம்பி என்பவரது வீட்டுக்கதவை அரிவாளால் வெட்டினர். இதோடு வீடுகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களையும் சேதப்படுத்தினர். இதைதொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.திண்டுக்கல் டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா, எஸ்.பி., சீனிவாசன், கூடுதல் எஸ்.பி., க்கள் லாவண்யா, சந்திரன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
நிலக்கோட்டை டி.எஸ்.பி., சுகுமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மோதல் தொடர்பாக பள்ளபட்டி தெற்கு தெருவை சேர்ந்த பிரவீன் ராஜா 26, அருண் பாண்டி 26, தீபக் குமார் 23, கனிராஜா 25, பிச்சை மருது, செந்தில்ராஜன் 31 , ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆதித்யா, சத்திரியன் உட்பட பலரை தேடி வருகின்றனர்.கல்லூரியில் மாணவி தற்கொலை; தேர்வு பயம் காரணமா என விசாரணை


கடலுார் : கடலுார் மகளிர் கல்லுாரி கழிப்பறையில் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலுார், செம்மண்டலத்தில், கந்தசாமி நாயுடு மகளிர் கலைக்கல்லுாரி உள்ளது. பச்சையப்பா டிரஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள இக்கல்லுாரியில், விழுப்புரம் மாவட்டம், சின்னபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் மகள் தனலட்சுமி, 19; மாலை நேர வகுப்பில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார்.


latest tamil newsஅதே பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, கல்லுாரி சென்று வந்தார். நேற்று மாலை நேர வகுப்புக்கு வர வேண்டிய அவர், அதிகாலை 7:30 மணிக்கே கல்லுாரிக்கு வந்துள்ளார்.கல்லுாரி பின்புறம் உள்ள கழிப்பறைக்கு சென்று, துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லுாரி ஊழியர் ஒருவர் கழிப்பறைக்கு சென்றபோது, தனலட்சுமி பிணமாக தொங்கியதை பார்த்து தகவல் தெரிவித்தார். கடலுார் போலீசார், கல்லுாரியில் விசாரணை நடத்தினர்.தனலட்சுமியை சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை மாலை அவரது தந்தை, நாகலிங்கம் கல்லுாரி விடுதியில் விட்டு சென்றதாக அவருடன் தங்கியிருந்த மாணவியர் தெரிவித்தனர்.
தனலட்சுமியின் புத்தக பையை சோதனை செய்ததில், அண்ணனுக்கு எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், 'தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, எழுதியுள்ளார்.கடிதத்தை கைப்பற்றிய போலீசார், வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே தனலட்சுமியின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் நேற்று கல்லுாரி முதல்வரின் அறைக்கு சென்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினர்.

உருக்கமான கடிதம்!

தனலட்சுமி, தன் சகோதரர் சக்திக்கு எழுதிய உருக்கமான கடிதம்:நல்லா படிடா சக்தி. அம்மா, அப்பாவை பாத்துக்கோ. சீக்கிரமா வீடு கட்டிருங்க. இது போலியான உலகம் யாரையும் நம்பாதே. என்னுடைய வாட்சை நிஷாந்திக்கு கொடுத்துவிடு. என் அக்கவுன்டில் 6,000 ரூபாய் பணம் இருக்கு. அதை எடுத்து வாட்ச் வாங்கிக்கோ. தேர்வில் நான் பெயில் ஆகி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது. இதனால் நான் உலகத்தை விட்டுப் போகிறேன். நான் இறந்துவிட்டால் என்னுடைய என்.சி.சி., உடையை போட்டு விடுங்க. லவ் யு அம்மா, அப்பா.இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.
குடும்ப பிரச்னையால் கோபம்2 குழந்தைகளை கொன்ற தாய்


புதுக்கோட்டை : பொன்னமராவதி அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, பெற்ற தாயே இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கருப்பர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பொன்னடைக்கன், 30; பொள்ளாச்சியில் தேங்காய் உரிக்கும் கூலி வேலை பார்க்கிறார்.
அவரது மனைவி பஞ்சவர்ணம், 24.மூன்றாண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு, ஜெகதீசன், 2, என்ற ஆண் குழந்தையும், தர்ஷியா என்ற-, 8 மாத பெண் குழந்தையும் இருந்தன.கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால், விரக்தி அடைந்த பஞ்சவர்ணம், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, இரண்டு குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, தாய்க்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
பதறிய பஞ்சவர்ணத்தின் தாய் சின்னப்பிள்ளை மற்றும் அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று பார்த்த போது, குழந்தைகள் இருவரும் சடலமாக கிடந்தனர். அருகில் தாய் பஞ்சவர்ணம் அழுதபடி இருந்தார்.தகவலறிந்த பொன்னமராவதி போலீசார், குழந்தைகளின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்; பஞ்சவர்ணத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.குடும்ப பிரச்னை காரணமாக, பெற்ற தாயே, இரண்டு குழந்தைகளை கொன்றது, அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தம்பியை சுட்டுக்கொன்ற'மாஜி' ராணுவ வீரர் கைது


திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கரிப்பூரைச் சேர்ந்தவர் மாஜி ராணுவ வீரர் தேசிங்கு, 70; இவரது மகன் மாஜி ராணுவ வீரர் ஜெகதீசன், 50; மனைவி, மகன், மகள் உள்ளனர். இவரது தம்பி கோதண்டராமன், 38, திருமணமாகாதவர்; இவர் தன் தாய் தேவகியுடன் வசித்து வந்தார்.
இவர்களுக்கு சொந்தமான சொத்தை பாகப்பிரிவினை செய்து தர, கோதண்டராமன் நீண்ட நாட்களாக கேட்டும்,ஜெகதீசன் மறுத்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இது தொடர்பாக இருவரிடை‍யே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெகதீசன், கோதண்டராமனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பினார். சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து, போளூரில் தங்கியிருந்த ஜெகதீசன், அவரது மனைவி சிவகாமி, 45, ஆகியோரை நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.இந்திய நிலவரம்

29 ஆண்டுக்கு பின் நான்கு பேர் கைது


latest tamil newsஆமதாபாத் : மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த நான்கு பேரை, 29 ஆண்டுகளுக்கு பின், குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை போலீசார் கைது செய்தனர்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ௧௯௯௩ல் அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் 257 பேர் இறந்தனர்; 700க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.இந்த வழக்கு தொடர்பாக மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 160 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த நான்கு பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர், ஆமதாபாதின் சர்தார் நகரில் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள், அபுபக்கர், யூசுப் பட்கா, ஷோயிப் குரேஷி, சையத் குரேஷி என தெரிந்தது.


1,183 கிலோ கஞ்சா பறிமுதல்


கவுகாத்தி : திரிபுராவிலிருந்து அசாம் மாநிலத்துக்கு கடத்தி வரப்பட்ட, 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.


latest tamil news
திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலும், அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலும், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான திரிபுராவின் அகர்தலா நகரில் இருந்து ஒரு லாரி, அசாம் மாநிலம் கவுகாத்தி நகருக்கு வந்தது.இரு மாநிலங்களின் எல்லை அருகே, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு போலீசார் அந்த லாரியில் சோதனை நடத்தினர். அதில் இருந்த பார்சல்களில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 1,183 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் மற்றும் உடன் இருந்தவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.ரூ.3 லட்சம் கொக்கைன், போதை மாத்திரைகள் பறிமுதல்: வெளிநாட்டினர் மூவர் புதுச்சேரியில் கைது


latest tamil news


புதுச்சேரி:புதுச்சேரியில், முதல் முறையாக 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொக்கைன், எம்.டி.எம்.ஏ., போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெளிநாட்டை சேர்ந்த 2 மாணவர்கள் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.புதுச்சேரி, குருசுக்குப்பம் மரவாடி தெருவில் கல்லுாரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கண்காணித்தனர். அங்கு, சந்தேகத்திற்கிடமாக ஒரு பெண் உள்ளிட்ட மூன்று வெளி நாட்டினர் நின்றிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.இளைஞர்களை சீரழிக்கும் கொக்கைன் என்ற போதை வஸ்து மற்றும் எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரைகளை வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.விசாரணையில் அவர்கள், ஆப்ரிக்கா தான்சான்யாவை சேர்ந்த ஜஸ்டின் டெல்வின் டரிமோ,29, சூடான் நாட்டை சேர்ந்த டேவிட் மைக்கல் எலியா, 26, கென்யாவை சேர்ந்த பிரான்சிஸ் லக்கி ஓத்ரி, 22, என்பது தெரியவந்தது.அதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 11 கிராம் எடையுள்ள 30 எம்.டி.எம்.ஏ., போதை மாத்திரைகள் மற்றும் 21 கிராம் எடையுள்ள 23 கொக்கைன் பவுடர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.விசாரணைக்கு பின்னர் அவர்களை புதுச்சேரி கோர்ட்டில்ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது:ஜஸ்டின் டெல்வின் டரிமோ புதுச்சேரிக்கு சுற்றுலா விசாவில்வந்துள்ளார்.இதற்கு முன் சில மாதங்கள் டில்லியில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்தார்.போதிய வருமானம் இல்லாததால், டில்லியில் இருந்து போதைமாத்திரைகளை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்க திட்டுமிட்டு ஆரோவில்லுக்கு வந்துதங்கினார்.டேவிட் மைக்கல் எலியா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஐ.டி., மூன்றாமாண்டு படித்துவருகிறார்.பிரான்சிஸ் லக்கி ஓத்ரி, சேலம் ஏ.வி.ஆர். கலை அறிவியல் கல்லுாரியில் எம்.சி.ஏ., படித்து வருகிறார்.

இவர்கள் அவ்வப்போது போதை மாத்திரைகளை விற்க புதுச்சேரிக்கு வந்துசென்றுள்ளனர். இவர்கள் மூவரையும் 6 பேர் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.போதைப்பொருள் விற்ற கும்பலை கைது செய்த போலீசாரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சீனியர் எஸ்.பி., வம்சீதரா ரெட்டி பாராட்டினார். புதுச்சேரியில் கஞ்சா அடிக்கடி பறிமுதல்செய்யப்பட்டு வருகிறது.ஆனால் ஹெராயின், கொக்கைன், எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட விலை உயர்ந்தபோதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை.இரண்டரை ஆண்டுகளுக்கு முன், புதுச்சேரியில் முதன் முறையாக எல்.எஸ்.டி., என்ற போதை ஸ்டாம்ப்பறிமுதல் செய்யப்பட்டது.தற்போது, கொக்கைன் மற்றும் எம்.டி.எம்.ஏ., போதை மாத்திரை கைப்பற்றப்பட்டுள்ளது.
போதை பொருட்கள் தடுப்பு பிரிவு சீனியர் எஸ்.பி., வம்சீதரா ரெட்டி கூறியதாவது:கடந்த ஓராண்டாக இவர்கள் புதுச்சேரியில் கல்லுாரி மாணவர்களை குறி வைத்து கொக்கைன், எம்.டி.எம்.ஏ.,போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு டில்லியில் இருந்து பார்சலில் இந்த போதை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை டில்லியில் இருந்து அனுப்பியது யார் என விசாரணை நடத்தி வருகிறோம். போதைப் பொருள் விற்பனையில் பெரிய நெட்வொர்க் உள்ளது. இதில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.போதைப் பொருள் பயன்படுத்துவதால் நரம்புகள் பாதிக்கும். உடல் சோர்வு ஏற்படும். தினசரி 4 மணி நேரத்துக்கு புத்துணர்ச்சியற்ற நிலையில் இருப்பர். பசி ஏற்படாது. இளம் வயதிலேயே முதுமைத் தோற்றம் வரும். போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையானால், பின்னர் இதை தடுப்பது கடினம்.பெற்றோர் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்களின் செயல்பாடு சந்தேகத்துக்குரிய முறையில் இருந்தால் உடனடியாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.திருடனை விரட்டிய ஆசிரியர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு


சதோல் : அலைபேசியை பறித்துச் சென்ற திருடனை விரட்டிய பள்ளி ஆசிரியர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

மத்திய பிரதேச மாநிலம், சாகர் நகரைச் சேர்ந்தவர் மனோஜ் நேமா, 54. தனியார் பள்ளி ஆசிரியர். சமீபத்தில்,துர்க் -- அஜ்மீர் ரயிலில் பயணம்செய்தார். சதோல் ரயில் நிலையம் அருகே ரயில் சென்றபோது, உடன் பயணித்த ஒருவர், அவசரமாக பேச வேண்டும் எனக்கூறி, மனோஜின் அலைபேசியை வாங்கினார்.ஆனால், அதை எடுத்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்கி ஓடினார். மனோஜும் அவரை விரட்டிச் சென்றார். தண்டவாளத்தைக் கடந்து ஓடியபோது, ரயிலில் அடிபட்டு மனோஜ் நேமா, அதே இடத்தில் உயிரிழந்தார்.விசாரணை நடத்திய போலீசார், அருகிலுள்ள கெரி என்ற கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திர சிங் என்பவரை கைது செய்து, அலைபேசியை பறிமுதல் செய்தனர்.


ரூ.2 லட்சம் பணம் கொள்ளை


புதுச்சேரி:கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் பழனியாண்டி, 59; உழவர்கரை நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிகிறார்.இவர் நேற்று காலை 10:30 மணி அளவில், ரெட்டியார்பாளையத்தில் உள்ள வங்கியில் நகைகளை அடகு வைத்து, ரூ. 2 லட்சத்து 19 ஆயிரம் பெற்றார்.பணத்தை தனது ஸ்கூட்டர் சீட்டின் கீழ் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு,பூக்கடையில் பூ வாங்கி கொண்டிருந்தார்.மோட்டார் பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் பழனியாண்டி ஸ்கூட்டர் சீட்டை உடைத்து, பணப்பையை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.சிறுமியருக்கு தொல்லை: 2 பேர் கைது

காரைக்கால்;திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, 36 வயது நபர், தனியார் பஸ் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, மூன்று வயது மகளுடன் காரைக்காலில் தாய் வீட்டில் உள்ளார்.நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு வந்த நடத்துனர், மூன்று வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய், கோட்டுச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். நடத்துனர் மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார்வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்காரைக்கால், சின்னகண்ணு செட்டித் தெருவை சேர்ந்தவர் நவாஸ்,44. வீடுகளுக்கு தண்ணீர் கேன் வினியோகிக்கும் வேலை செய்து வருகிறார். நகரப் பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வரும் 15 வயது சிறுமியுடன் நவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சிறுமிக்கு நவாஸ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நகர போலீசார் நவாஸ் மீது 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


சிறுமியருக்கு தொல்லை: 2 பேர் கைது

காரைக்கால்;திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, 36 வயது நபர், தனியார் பஸ் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி, மூன்று வயது மகளுடன் காரைக்காலில் தாய் வீட்டில் உள்ளார்.நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு வந்த நடத்துனர், மூன்று வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய், கோட்டுச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். நடத்துனர் மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார்வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம்காரைக்கால், சின்னகண்ணு செட்டித் தெருவை சேர்ந்தவர் நவாஸ்,44. வீடுகளுக்கு தண்ணீர் கேன் வினியோகிக்கும் வேலை செய்து வருகிறார். நகரப் பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வரும் 15 வயது சிறுமியுடன் நவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சிறுமிக்கு நவாஸ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நகர போலீசார் நவாஸ் மீது 'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.தகவல்களை திருடி தீவிரவாத அமைப்புகளிடம் தந்த போலீஸ்காரர்கள்

மூணாறு : கேரளா மூணாறு ஸ்டேஷனில் இருந்து முக்கிய தகவல்களை திருடி தீவிரவாத அமைப்புகளிடம் கொடுத்த போலீஸ்காரர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.மூணாறு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை கையாண்ட போலீஸ்காரர் கம்ப்யூட்டரில் பாதுகாக்கப்பட்டு வரும் முக்கிய தகவல்களை திருடி தீவிரவாத அமைப்புகளிடம் கொடுத்துள்ளார். அதற்கு இரு போலீஸ்காரர்கள் உதவியுள்ளனர்.
அதுகுறித்து சிறப்புப்பிரிவு மற்றும் பல்வேறு ரகசிய பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். அதனை அறிந்த சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் பணியிட மாற்றத்திற்கு முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் தீவிரவாத அமைப்புகளிடம் கொடுத்த தகவல்கள் என்ன, அதற்கு கைமாறாக பெற்றது என்ன என்பது விசாரணையில் தெரியவரும்.இதற்குமுன் இதேபாணியில் தொடுபுழா ஸ்டேஷனில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் பெயர் பட்டியலை போலீஸ்காரர் ஒருவர் திருடி கொடுத்தார். அது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கடந்த மாதம் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.புடவை கட்ட தெரியாத மனைவி; கணவர் தற்கொலை


அவுரங்காபாத் : மனைவிக்கு புடவை கட்டத் தெரியவில்லை என்பதால், மஹாராஷ்டிராவில் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.மஹாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத் அருகே முகுந்த் நகரில் வசித்தவர் சமதான் சபேல், 24. ஆறு மாதங்களுக்கு முன், தன்னை விட, 6 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'மனைவிக்கு சேலை கட்டத் தெரியவில்லை; ஒழுங்காக நடக்கவோ, பேசவோ தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். அவுரங்காபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X