வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பத்தூர்: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று (மே 18) விடுதலை செய்தது. இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் தன் வீட்டில் இருந்து செய்தியாளர்களுக்கு பேரறிவாளன் அளித்த பேட்டி: நல்லவர்கள் வாழ வேண்டும், தீயவர்கள் வீழ வேண்டும் என்பது தான் நியதி. நல்லவருக்கு விளையும் கேடு என்பதுதான் சிறைவாசம். எங்கள் பக்கம் இருந்த உண்மையும், நியாயமும் எங்களுக்கு வலிமையை கொடுத்தது.
அம்மா
எனது அம்மா நிறைய வேதனைகளையும், வலிகளையும் அனுபவித்தார். மாக்சிம் கார்க்கி எழுதிய ‛தாய்' நாவலுடன் எனது தாயை ஒப்பிட்டு பார்த்தேன். சிறையில் தொடர்ந்து படித்தது பல்வேறு உணர்வுகளை தந்தது. எனது அம்மாவின் தனி வாழ்க்கையை திருடிவிட்டேனே என வேதனையாக உள்ளது. இந்த போராட்டம் எங்களுடையது மட்டுமல்ல, பலருடையது. எனது விடுதலைக்காக பலரும் தங்கள் சக்தியை மீறி போராடியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.
திருப்புமுனை
விசாரணை அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம் தான் திருப்புமுனையை ஏற்படுத்தியது. நீதிபதி கிருஷ்ணய்யர் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மண்டியிட்டு கேட்பதாக எனக்காக கடிதம் எழுதியிருந்தார். அவரும் என் விடுதலைக்காக போராடினார். நாங்கள் நன்றி சொல்லக்கூடிய பட்டியல் நீண்டதாக உள்ளது. எனது குடும்பம், உறவுகளின் பாசம்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. 2011ல் சகோதரி செங்கொடியின் உயிர் தியாகம் அளப்பரியது. அரசு, மக்களின் ஆதரவு பெருகுவதற்கு அதுவே காரணம்.

ஊடகங்கள் இல்லையெனில் உண்மைகள் வெளிவந்திருக்காது, மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது. மரண தண்டனையே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்கு இந்த விடுதலை உதாரணம். விரைவில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
அற்புதம்மாள்
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறுகையில், ‛பேரறிவாளனுக்கு இந்த அரசு தொடர்ந்து பரோல் கொடுத்தது. அதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. முகம் தெரியாத எத்தனையோ பேர் எனது மகனின் விடுதலைக்காக உதவியிருந்தனர். அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE