வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி இடும்பன் கோவில் குளக்கரையில் நடக்கவிருந்த மஹா சங்கமம் ஆரத்திக்கு, போலீசார் அனுமதி மறுத்தனர். இதில் பங்கேற்க வந்த பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பழநியில் ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில், இடும்பன் கோவில் குளக்கரையில் கங்கா மஹா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்தனர். இதனால் சட்டம் - ஒழுங்கு, பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி போலீசார் அனுமதி மறுத்தனர். நிகழ்ச்சிக்கு, மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், எச்.ராஜா சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர்.
எச்.ராஜா, காரில் பழநி வந்தார். வரும் வழியில் மாலை, 5:00 மணிக்கு சத்திரப்பட்டியில், திண்டுக்கல் எஸ்.பி., ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் அவரை வழிமறித்து கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதை அறிந்த செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், மண்டபம் வந்தார்; பா.ஜ.,வினரும் அங்கு திரண்டனர்.
திண்டுக்கல் சாலையில், பா.ஜ.,வினர் மறியலில் ஈடுபட்டனர். இரவு 7:00 மணிக்கு துவங்கிய மறியல் இரவு 7:20 மணி வரை நீடித்தது. மறியலில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் எச்.ராஜாவிடம் பேச்சு நடத்தி, பழநி முருகன் கோவிலுக்கு செல்ல மட்டும் அனுமதி வழங்கினர். இரவு 8:05 மணிக்கு அவரை விடுவித்தனர். அதன் பின், பழநி கோவிலுக்கு அவர் புறப்பட்டு சென்றார்.
செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், ''ஆரத்தி நிகழ்ச்சியை தடுக்க போலீசார் எச்.ராஜாவை கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இனி, ஹிந்துகள் இணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.
எச்.ராஜா கூறும் போது, ''பழநியில் இடும்பன் குளத்தில் ஆரத்தி விழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இனி அனைத்து கோவில் சார்ந்த குளங்களிலும் ஆரத்தி விழா நடத்தப்படும்,'' என்றார்.