சென்னை: துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த முரசொலி நாளேட்டிற்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மே 17-ம் தேதி முரசொலி நாளேட்டில், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை தரம் தாழ்ந்து, மோசமாக விமர்சித்ததற்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த வாரம் துக்ளக் பத்திரிக்கை ஆண்டு விழாவில், குருமூர்த்தி பேசுகையில், முதல்வரின் 'ஓசி பஸ் பயணம் தான் திராவிட மாடலா' என்றார். இதற்கு மே 17-ம் தேதி முரசொலியில், 'தட்சணையில் வாழக்கூடிய கூட்டத்தின் பிரதிநிதியான குருமூர்த்தி, ஓசியை பற்றி பேசலாமா என்று அவர் சார்ந்துள்ள பிராமண சமுதாயத்தை இழிவாக பேசியுள்ளது மிகவும் கண்டிக்க தக்கது. அரசியல் பிரச்சனையில், தேவையில்லாமல் ஜாதியை சம்பந்தப்படுத்தி முரசொலி எழுதி உள்ளது.
கோவில் திருவிழாக்களில் கல்யாண நிகழ்ச்சியில் இசை வாசிப்பவர்கள், உழைத்து ஊதியம், தட்சணை பெறும் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்துவது அவர்களது அதிகார வெறியை காட்டுகிறது. குருமூர்த்தியை சாடுவதற்காக, அவர் சார்ந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் கொச்சைப்படுத்துவதா? பிராமணர்கள் - உழைப்பால், நேர்மையால், கடவுள் பக்தியால், தேச பக்தியால் உயர்ந்தவர்கள். எந்த அரசியல் கட்சியும், தலைவனும் கை தூக்கிவிடாமல், சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்த சமுதாயம். அரசியல் பிரச்சனைகளுக்கு, அரசியல்ரீதியாக, நாகரீகமாக பதில் அளிக்காமல், கீழ்த்தரமான விமர்சனங்களை கையாளுவது திமுக-வின் கை வந்த கலை.
திமுக தலைவர்கள், கடவுள் மறுப்பை பற்றி கூறுவார்கள். அவர்களது குடும்பத்தினர் பரிகார பூஜை, அபிஷேகம் என்று கோவில்- கோவிலாக செல்வார்கள். செத்த பாம்பை அடிப்பதுபோல், எதற்கெடுத்தாலும் பிராமண சமூகத்தை இழிவு செய்வது இவர்களது வாடிக்கை. இவர்கள் நடத்தும் கம்பெனிக்கு பிராமணர் ஆடிட்டர், குடும்ப வைத்தியராக பிராமண டாக்டர், கோர்ட்டில் வாதாட பிராமண வக்கீல் என்றெல்லாம் இரட்டை வேஷம்.
தமிழக முதல்வர், நான் எல்லா மக்களுக்கும் முதலமைச்சர் என்று கூறுவார். ஆனால் நடைமுறையில் மைனாரிட்டி மக்களுக்கு வக்காலத்து வாங்கி, ஒருதலைப்பட்சமாக நடப்பது இவரது திராவிட மாடல்.
'முரசொலி' பத்திரிக்கை, கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சபை நாகரிகம் கருதி, பல கசப்பான உண்மைகளை நாங்கள் கூற விரும்பவில்லை. பிராமண சமுதாயமும் வீதிக்கு வந்து போராட தயாராக உள்ளார்கள். முரசொலி பத்திரிக்கை தங்களது இழிவான விமரிசனத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று எங்களது பிராமண சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE