ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், தன் ஆதரவாளருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பிடிவாதமாக இருப்பதால், அக்கட்சியின் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண, சென்னையில் இன்று(மே 19), கட்சியின் வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதையடுத்து, நாளை ஆட்சிமன்ற குழு கூடி, வேட்பாளர் பெயர்களை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த மாதம் 10ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. வரும் 24ம் தேதி, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவதால், அதற்கு பதிலாக புதியவர்களை தேர்வு செய்ய, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் போட்டி
இந்த தேர்தலில், தி.மு.க., சார்பில் கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஒரு பதவியை, காங்கிரசுக்கு விட்டுத் தந்துள்ளது.காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் அழகிரியும், அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அதேநேரத்தில், அ.தி.மு.க., சார்பில், இரண்டு இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். அக்கட்சியால் இரண்டு எம்.பி.,க்களை தேர்வு செய்ய முடியும் என்பதால், அக்கட்சியினர் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் உள்ள கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில், நான்கு நாட்களாக சிகிச்சையில் இருந்த பன்னீர்செல்வம், நேற்று சென்னை திரும்பினார். இரண்டு எம்.பி., பதவிகளில் ஒன்றை தன் ஆதரவாளருக்கு தர வேண்டும் என, வலியுறுத்தி உள்ளார். அதிலும் அவர் தென் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
ஆனால், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியோ, முன்னாள் அமைச்சர்கள் இருவர் பெயரை பரிந்துரைத்துள்ளார். சென்னை மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த அந்த இருவரும், கட்சியில் முக்கியமானவர்கள் என்பதால், அவர்களை அறிவிக்க ஆதரவு தர வேண்டும் என, பழனிசாமி கூறுகிறார்.
தர்மயுத்தம்
ஆனால், பன்னீர்செல்வத்துடன் தர்மயுத்தத்தில் பங்கேற்றவர்களும், ஆட்சிக் காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும், தற்போது பழனி சாமி பக்கம் போய் விட்டனர். அவர்களை எல்லாம் தன்னுடைய ஆதரவாளர் கணக்கில் சேர்க்கக் கூடாது என்றும், தான் சொல்கிற ஆதரவாளரை தான் அறிவிக்க வேண்டும் என்றும், பன்னீர்செல்வம் கறாராக சொல்வதாக தெரிகிறது.
இதனால், வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காண, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இன்று கட்சியின் வழிகாட்டுதல் கூட்டத்தை கூட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
உடன்பாடு
அதில் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசித்த பின், நாளை ஆட்சிமன்ற குழு கூடி, வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பன்னீர் செல்வத்திற்கும், பழனிசாமிக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் போனால், வழிகாட்டுதல் குழு மற்றும் ஆட்சிமன்ற குழு கூட்டங்கள் நாளை நடத்தப்படும் என்கிறது, அக்கட்சி வட்டாரம்.
ஜெயகுமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் என, ஏராளமானோர் ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு முட்டி மோதுகின்றனர். மொத்தம், 300க்கும் மேற்பட்டோர், எம்.பி., பதவி கேட்டு, கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தென் மாவட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக, 'இம்முறை ராஜ்யசபா எம்.பி., பதவிகளை, இப்பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் கொங்கு மண்டலம் மற்றும் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது. இம்முறை கண்டிப்பாக வாய்ப்பு வழங்க வேண்டும்' என, கட்சி தலைமையிடம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.குறிப்பாக, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை வழங்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ளனர். இதேபோல், முன்னாள் அமைச்சர்கள் சிலர், சமுதாய அடிப்படையில் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE