வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கூடலுார்--மதுரை குடிநீர் திட்டத்திற்காக தேனி மாவட்டம், லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட பொதுப்பணித்துறை சார்பில் பூமிபூஜை நடந்தது.லோயர்கேம்ப் முல்லைப்பெரியாற்றில் இருந்து நேரடியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு அரசு ரூ.1296 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இத்திட்டத்தினால் நிலத்தடி நீர் பாதிக்கும், கோடைகாலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள 58 குடிநீர் திட்டங்களுக்கும் பிரச்னை ஏற்படும் எனவும், அதனால் வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல வலியுறுத்தியும் சில மாதங்களாக இப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டங்களை நடத்தினர்.
பூமிபூஜை
இந்நிலையில் நேற்று காலை லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இத்திட்டத்திற்காக தடுப்பணை கட்டுவதற்கு வண்ணாந்துரையில் பூமி பூஜை நடந்தது. மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, பெரியாறு வைகை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அன்புச்செல்வன், மதுரை மண்டல பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுகுமார் கலந்து கொண்டனர். பூமி பூஜைக்கு பின் தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் துவங்கின.
ஆர்ப்பாட்டம்
திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைச்சாரல் விவசாய சங்கம், பாரதிய கிசான் சங்கம், கூடலுார் விவசாய சங்கம், இயற்கை வேளாண் விவசாய சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் குறுவனத்துப்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். உத்தமபாளையம் ஏ.எஸ்.பி., ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் இவர்களை கலைந்து செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE