வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு அனுப்பிய கடிதம்:
பி.கமல்பிரகாஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'காங்கிரஸ் கட்சி, தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு, மக்கள் உடனான தொடர்பை இழந்து விட்டதே காரணம். அதனால், மக்களுடனான தொடர்பை, நாம் பலப்படுத்த வேண்டும்.
'நாடு முழுதும் உள்ள மக்களை நேரடியாக சந்திக்க, அக்டோபர் மாதத்தில் யாத்திரை நடத்தப்படும்' என, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த, காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்.
மக்கள் உடனான தொடர்பை இழந்து விட்டது, காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தாலும், வேறு பல பிரச்னைகளும் உள்ளன. அதாவது, எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தேவையற்ற காலதாமதம், தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்குவதில் குழப்பம், தலைவர்களின் மந்தமான செயல்பாடு, அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பதிலடி கொடுக்காதது...

சரியான எதிர்க்கட்சியாக செயல்பட தவறியது, கட்சியில் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை, கோஷ்டி பூசல் உருவாக அனுமதித்தது, வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தியது, சிறப்பாக செயல்படும் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தராமல், அவர்கள் மாற்றுக் கட்சிக்கு தாவும் வகையில் செயல்படுவது என, காங்கிரசில் பல பிரச்னைகள் உள்ளன. இந்தப் பிரச்னைகளை எல்லாம் தீர்ப்பதுடன், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி திட்டத்தையும் முழு அளவில் அமல்படுத்த வேண்டும்.
கட்சிப் பதவியில் இருப்போருக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ., பதவி வழங்கக் கூடாது. அதே நேரத்தில், எம்.எல்.ஏ., - எம்.பி., பதவிகளில், குறிப்பிட்ட சிலர் மட்டுமே, பல ஆண்டுகளுக்கு நீடிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். இது தவிர, கட்சிப் பதவிகளில் பாதிக்கும் மேற்பட்டதை, ௫௦ வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வழங்குவது பேச்சு அளவில் இல்லாமல், செயல் அளவில் இருக்க வேண்டும்.
மத்தியில், எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. இருந்தும், கட்சியை புனரமைக்கவும், துடிப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படவும், தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சித் தலைமையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என, சில தலைவர்கள் சமீப நாட்களாக குரல் கொடுத்து வந்தனர். அவர்களின் குரல், உதய்பூர் கூட்டத்தில் ஓங்கி ஒலிக்கவில்லை; மாறாக அமைதியாகி விட்டது. அதனால், சோனியா குடும்பத்தினரே தலைவர் பதவியில் நீடிப்பது உறுதியாகியுள்ளது.
நாட்டில், 'எமர்ஜென்சி'யை பிரகடனம் செய்ததால், மக்களால் தோற்கடிக்கப்பட்ட இந்திரா, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமரானார். அதனால், கட்சியில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருவது மட்டுமின்றி, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவும், மக்களை கவரும் விதமாகவும் செயல்பட்டால் தான், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியும். இல்லையெனில், மீண்டும் ஆட்சி அதிகாரம் என்பது கானல் நீர் தான்; இந்திரா போல சாதிப்பாரா சோனியா?