வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருநெல்வேலி,-திருநெல்வேலி அருகே கல் குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து, மேலும் ஒரு உடலை மீட்டனர். இன்னும் ஒரு உடல் மீட்கப்பட வேண்டியுள்ளது.
விபத்து நடந்த குவாரி உரிமையாளரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் தனியார் கல்குவாரியில் மே 14 இரவு 11:30 மணிக்கு திடீரென பாறை சரிந்து விழுந்தது.அந்த குவாரியில், 300 அடி ஆழத்தில் கற்களை இயந்திரங்கள் மூலம் அள்ளி, லாரியில் ஏற்றும் பணியில் இருந்த ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். மறுநாள் காலையில் தீயணைப்பு மீட்பு குழுவினர், முருகன், விஜயன் ஆகிய இருவரை உயிருடன் மீட்டனர்.
மாலையில் மீட்கப்பட்ட செல்வம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். டிரைவர்கள் ராஜேந்திரன், முருகன், செல்வகுமார் ஆகியோர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தனர்.
3 பிரிவுகளில் வழக்கு
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கமாண்டன்ட் விவேக் வத்சவ் தலைமையில், 30 பேர் மே 16ல் பாறை இடிபாடுகளில் இருந்து முருகன் உடலை மீட்டனர். நான்காவது நாளான நேற்று ராஜேந்திரன், செல்வகுமார் உடல்களை மீட்கும் பணி நடந்தது.சாரல் மழை பெய்ததால் காலை 11:00 மணிக்கு மீட்பு பணியை துவங்கினர். கடினமான பாறைகள் என்பதால் அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. மதியம் 3:00 மணிக்கு பாறைகளில், 10 இடங்களில் துளையிட்டு வெடிமருந்துகள் வைத்து ஒரே நேரத்தில் வெடிக்க செய்தனர்.
பின், உடைந்த பாறைகளை அப்புறப்படுத்தினர். மாலை 6:40 மணிக்கு செல்வகுமாரின் உடலை மீட்டனர்.குவாரி கிரஷர் உரிமையாளரான, தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் செல்வராஜ், அவரது மகன் குமார், குத்தகைதாரர் சங்கரநாராயணன், மேஸ்திரி ஜெபசிங் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டு உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெபசிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.செல்வராஜ், குமார் தலைமறைவாகி விட்டனர்; அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களின் கிரஷர் பெயரில் திருநெல்வேலி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள வங்கி கணக்கை நேற்று போலீசார் முடக்கினர்.அதில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருப்பு உள்ளது.
உடல்களை பெற மறுப்பு
குவாரி விபத்தில் சிக்கிய விஜயன், முருகன் ஆகியோர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். முருகன், செல்வம் ஆகியோர் உடல்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே, உடல்களை பெறுவோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.நேற்று மீட்கப்பட்ட செல்வகுமாரின் உடலோடு சேர்த்து, தற்போது, அரசு மருத்துவமனையில் மூன்று உடல்கள் உள்ளன. ராஜேந்திரன் உடல் மீட்கப்பட வேண்டியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE