கோவையில் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள இரண்டு பாலங்கள், பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருப்பதால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இவற்றில், தேசிய நெடுஞ்சாலையான திருச்சி ரோட்டில், ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் ரூ.253 கோடி மதிப்பில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பழைய ஸ்டாக் எக்சேஞ்சில் துவங்கி, ரெயின்போ பகுதி வரையிலுமாக 3150 மீட்டர் துாரத்துக்கு, 'சென்டர் மீடியன்' உடன் சேர்த்து 17.20 மீட்டர் அகலத்தில் நான்கு வழிப்பாதையாக இந்த பாலம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
உக்கடம்-வாலாங்குளம் பை - பாஸ் ரோட்டில், 200 மீட்டருக்கு எட்டரை மீட்டர் அகலத்துடன் இரு வழிப்பாதையாக இறங்கு தளமும் அமைக்கப்பட்டுள்ளது.மின் விளக்கு பொருத்துவது, சர்வீஸ் ரோடு, வர்ணம் பூசுவது என அனைத்துப் பணிகளும், கடந்த மாதமே முடிவடைந்து விட்டன. ஆனால் பாலம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக, சர்வீஸ் ரோட்டில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதேபோன்று, இந்த தேசிய நெடுஞ்சாலையின் தொடர்ச்சியாகவுள்ள மேட்டுப்பாளையம் ரோட்டில், ரூ.66 கோடி மதிப்பில், கவுண்டம்பாளையத்தில் 1205 மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்துடன் 'சென்டர் மீடியன்' உடன் கூடிய நான்கு வழிப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, பல மாதங்களாகி விட்டது. சில நாட்கள், மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டிருந்த இந்த பாலம், அதன் பின் மூடப்பட்டு விட்டது.இவ்விரு பாலங்களும், தமிழக முதல்வர் கோவைக்கு வரும்போது திறக்கப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கோவைக்கு இன்று முதல்வர் வந்திருப்பதோடு, அரசு நிகழ்ச்சி ஒன்றிலும், தொழில் முனைவோர் சந்திப்பிலும் பங்கேற்கவுள்ளார். ஆனால் பாலங்கள் திறப்பு குறித்து தகவல் இல்லை.தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும், பல்வேறு திட்டங்களையும் காணொலி வாயிலாகவே, தமிழக முதல்வர் துவக்கி வைக்கிறார்.ஆனால் கோவைக்கு நேரில் வந்தும், இந்தப் பாலங்களை திறக்காமல் இருப்பது, மாநகர மக்களிடம் கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த பாலங்களை விரைவாகத் திறந்து, மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டுமென்று, தமிழக முதல்வருக்கு சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்துார் அமைப்பின் தலைவர் ஜெயராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.முதல்வர் நல்ல முடிவெடுத்தால், இன்றே இந்த பாலங்கள் திறக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த இரண்டு பாலங்களும் ஏன் இன்னும் திறக்கப்படவில்லை என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'திருச்சி ரோடு பாலத்தில் சில பகுதிகளில் மட்டுமே, சர்வீஸ் ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு கி.மீ., துாரத்துக்கு மேம்படுத்த வேண்டியுள்ளது.அதேபோன்று, சுங்கம் சந்திப்புப் பகுதியிலும் வளைவுகளைச் சீரமைத்து, மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டரை கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.இந்தப் பணிகள், இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைந்து விடும். அதற்குப் பின் திறக்கலாம் என்று கருதி, பாலம் திறப்பு விழா இறுதி செய்யப்படாமல் இருந்திருக்கலாம்' என்றனர்.பாலத்தைத் திறந்து விட்டால், சர்வீஸ் ரோடு மேம்பாட்டுப் பணியை இன்னும் சிறப்பாகவும், சீக்கிரமாகவும் செய்யலாமே!
-நமது நிருபர்-