வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்,-குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் பதவியில் இருந்து படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் நேற்று ராஜினாமா செய்தார்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது.இம்மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல், 28, படிதார் எனப்படும் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி, 2015ல் போராட்டம் நடத்தினார். இதையடுத்து தேசிய அளவில் கவனம் பெற்ற ஹர்திக் படேல், 2019ல் காங்கிரசில் இணைந்தார்.
2020ல் குஜராத் காங்., செயல் தலைவரானார்.சமீபத்தில், காங்., தலைமைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்த அவர், செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார்.இது தொடர்பாக காங்., தலைவர் சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் அனைத்தையும் எதிர்ப்பதை மட்டுமே காங்., தொடர்ந்து செய்து வருகிறது. ராமர் கோவில், ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட விவகாரங்களில் பல ஆண்டுகளாக தீர்வு கிடைக்காத நிலையில், காங்கிரஸ் அவற்றுக்கு முட்டுக்கட்டையாக தான் இருந்துள்ளது.மக்களை தெளிவாக வழிநடத்த தவறிய காரணத்தால் பெரும்பான்மையான மாநிலங்களில் காங்., ஆட்சியை இழந்துள்ளது.
நம் நாடு மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்ட போதும், கட்சியை வழிநடத்த தலைமை தேவைப்பட்ட போதும், காங்., தலைவர்கள் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்றனர். குஜராத் காங்.,கின் மூத்த தலைவர்களுக்கு மக்கள் பிரச்னை பற்றி கவலையில்லை.
கட்சிக் கூட்டத்தில் தரப்படும், 'சிக்கன் சாண்ட்விச்' மீது தான் அவர்களின் கவனம் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், 'ஹர்திக் படேலின் கடிதத்தில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் அவருடையது அல்ல. அவை பா.ஜ.,வால் எழுதி தரப்பட்டது' என, காங்., குற்றஞ்சாட்டி உள்ளது.