பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் ரகளையில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் உள்ள ரவுடிகளை களையெடுக்க, உளவுப் பிரிவு போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர். அடாவடி மாணவர்களை கண்டறிவதுடன், அவர்களின் பின்னணியில் உள்ள ரவுடிகளை களையெடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய கல்லுாரிகளில், மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகள் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் படிக்க வருகின்றனர். அவர்கள், புறநகர் மின்சார ரயில்கள், மாநகர பேருந்துகளில் தினமும் பயணித்து, கல்லுாரிக்கு வந்து செல்கின்றனர். அவர்களில் சிலர் 'ரூட் தல' என்ற பெயரில், ரயில், பேருந்துகளில் கூட்டம் சேர்த்து ஆட்டம் போடுவதும், ரகளையில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதில், ஒவ்வொரு கல்லுாரிகளுக்கும், வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள், வெவ்வேறு அணிகளாக செயல்படுகின்றனர். இவர்களுக்கு பின்னணியில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த ரவுடிகளும் உள்ளனர். இதில் எந்த குழு வலுவானது என்பதில் அடிக்கடி மாணவர் குழுவினர் இடையிலும், ரவுடிகள் இடையிலும் மோதல் எழுகிறது. குறிப்பாக, மாநிலக் கல்லுாரி, பச்சையப்பன் கல்லுாரி, நந்தனம் அரசுக் கல்லுாரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் உருவாகிறது. இந்த மோதல், வன்முறையாக மாறுவதும் அதிகரித்து உள்ளது.
மாணவர்களின் இந்த மோதலால், பொதுமக்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதே போல, பேருந்துகளில் ரகளையில் ஈடுபடும் மாணவர்களை தட்டிக் கேட்கும் பொதுமக்கள், ஓட்டுனர், நடத்துனர்கள் தாக்கப்படுவதும், போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்த, பள்ளி, கல்லுாரிகளில், போலீசார் மற்றும் கல்வி நிறுவன நிர்வாககங்களின் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எனினும், மாணவர்களின் அராஜகப் போக்கு தொடர்கிறது.

இரு தினங்களுக்கு முன் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, நியூ கல்லுாரி மாணவர்கள், மாநகர பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது வெறித்தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, அப்துல் முத்தலிப் மற்றும் லோகேஷ் ஆகிய இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அதே போல, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஹாரிங்டன் சாலையில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள், கத்தி, பாட்டில்கள் மற்றும் கற்களால் தாக்கிக்கொண்டர். இது தொடர்பாக, 'ரூட் தல' மாணவர்கள் கிஷோர், பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ராயப்பேட்டை நியூ கல்லுாரியில், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை, உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கிய, ரக்கியூப் அகமது, முசாதிக், உமர் பரூக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடாவடியாக செயல்படும் மாணவர்களை, அவர்களின் எதிர்கால நலன் கருதி, இதற்கு முன் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மாணவர்களின் பெற்றோரை அழைத்து, அவர்களுக்கும் அறிவுரை வழங்கினர்.
அடாவடி மாணவர்களின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், அதை முற்றிலும் ஒடுக்க, போலீசார் அதிரடி நடவடிக்கையில் களம் இறங்கியுள்ளனர். அராஜக மாணவர்களின் பின்னணியில் ரவுடிகள் இருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அராஜகத்தில் ஈடுபடும் மாணவர்களையும், அவர்களின் பின்னணியில் உள்ள ரவுடிகளையும் களையெடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளவும், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பல்வேறு கல்லுாரிகளை நுண்ணறிவு எனப்படும் உளவு போலீசார் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் வந்து செல்லும், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ரயில் நிலையங்களில், சாதாரண உடையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல, ரயில்கள் மற்றும் பேருந்துகளிலும் ரகளை மாணவர்களை கண்டறியும் பணியில், போலீசார் ரகசியமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, பிரச்னைக்குரிய அடாவடி மாணவர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். அதன் அடிப்படையில், முதலில் ரவுடிகள் மீதும், அடுத்ததாக அவர்களின் தொடர்புள்ள மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது: ரகளையில் ஈடுபடும் மாணவர்கள், தங்கள் தவறை உணர்ந்து திருந்த வேண்டும். நன்றாக படித்து, பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும். பின், திட்டமிட்டு லட்சியப்பாதையில் பயணிக்க வேண்டும். அதை விடுத்து, தேவையற்ற ரகளை, வெட்டு, குத்து, வன்முறையில் ஈடுபடுவது எதிர்காலத்தை சீர்குலைக்கும். வழக்குப் பதிவு செய்யப்பட்டால், வேலை வாய்ப்பு கிடைப்பதில் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும். ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் பெறுவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே, மாணவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். காவல்துறையின் எச்சரிக்கைக்கு பிறகும், மாணவர்கள் அடாவடியில் ஈடுபட்டால், அவர்கள் கைது செய்யப்படுவதுடன் கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE