வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்திய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன், நேற்று முதல்வர் ஸ்டாலினிடம், அறிக்கை தாக்கல் செய்தார்.
துாத்துக்குடியில், 2018 மே 22ம் தேதி, 'ஸ்டெர்லைட்' தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, போராட்டம் நடந்தது; அப்போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், 13 பேர் இறந்தனர். வன்முறை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு; பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிக்க, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷனை, தமிழக அரசு அமைத்தது.
அவர் மாதம்தோறும் துாத்துக்குடி முகாம் அலுவலகத்தில், விசாரணை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு மே 14ம் தேதி, முதல்வரை சந்தித்து, இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார். நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வரை சந்தித்து, விசாரணையின் முழு அறிக்கையை அளித்தார். அறிக்கை குறித்து, அவர் கூறியதாவது:பாதிக்கப்பட்ட நபர்கள் ஏராளமானோர், தாமாக முன்வந்து, வாக்குமூலம் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஐந்து பாகங்கள் கொண்ட அறிக்கையை அளித்துள்ளேன். இது, 3,000 பக்கங்கள் கொண்டது.இரண்டு பாகங்களில், நடந்த சம்பவம் குறித்து விவரிக்கப்பட்டு உள்ளது.
மூன்றாம் பாகத்தில் ஆணையத்தின் பரிந்துரைகள்; நான்காம் பாகத்தில், வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் கூறப்பட்டுள்ளன.ஐந்தாம் பாகத்தில், 1,500 வீடியோ ஆவணங்கள், 1,250 சாட்சிகள், 1,500 காவல் துறையினரிடம் நடத்திய விசாரணை தகவல்கள் இடம் பெற்றுள்ளன. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரணம் வழங்க, அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் தனக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாது என்றும், உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துகளை பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.பேரணி, ஊர்வலம் போன்றவற்றின்போது, பொது மக்கள் எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE